தந்தையை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
பழனியில் குடும்ப பிரச்சினையில் தந்தையை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியது.;
பழனி டவுன் ராஜாஜி சாலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 40). கூலித்தொழிலாளி. இவரின் தந்தை மாரிமுத்து (75). குடும்ப பிரச்சினை காரணமாக தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஏற்பட்ட தகராறில் மணிகண்டன், தந்தை என்றும் பாராமல் மாரிமுத்துவை அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
இதுதொடர்பான வழக்கு பழனியில் உள்ள கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் சிவக்குமார் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கின் விசாரணை நிறைவு பெற்றதை அடுத்து நீதிபதி கருணாநிதி நேற்று தீர்ப்பு அளித்தார். அதில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.