மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை

மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2023-07-18 19:32 GMT

மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

சமோசா வியாபாரி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வடக்கு ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பாலசந்திரன் (வயது 43). இவருடைய மனைவி மகாலட்சுமி (36). இவர்களுக்கு கோதர்ஷன் (12), சிவகார்த்திகேயன் (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சிங்கப்பூரில் பணியாற்றி வந்த பாலசந்திரன் கடந்த 2019-ம் ஆண்டு சொந்த ஊருக்கு வந்தார்.

பின்னர் வீட்டிலேயே அதிகாலையில் சமோசா தயாரித்து அவற்றை கடைகளுக்கு சென்று பாலசந்திரன் விற்பனை செய்து வந்தார். இதற்காக அவர் அதிகாலை 3 மணிக்கே தனது மனைவியை எழுப்பி வந்துள்ளார். இது மகாலட்சுமிக்கு பிடிக்கவில்லை.

நடத்தையில் சந்தேகம்

மேலும் தனது மனைவியின் நடத்தையில் பாலச்சந்திரனுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் கடந்த 16-3-2019 அன்று அதிகாலை சமோசா தயாரிக்க தனது மனைவியை எழுப்பியுள்ளார்.

அப்போது, உங்களுக்கு வேறு வேலை இல்லை. சிங்கப்பூரிலேயே இருக்க வேண்டியது தானே. இங்கு வந்து, என்னை தூங்க விடாமல் அதிகாலையிலேயே எழுப்பிக்கொண்டு இருக்கிறீர்களே என்று கேட்டுள்ளார். அதற்கு, நான் சிங்கப்பூர் சென்றுவிட்டால் இங்கு சந்தோசமாக இருக்கலாம் என்று நினைக்கிறாயா? என்று பாலச்சந்திரன் கேட்டுள்ளார்.

கழுத்தை அறுத்து கொலை

இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் பாலச்சந்திரன் ஆத்திரம் அடைந்து, வீட்டில் வெங்காயம் வெட்ட பயன்படுத்தும் கத்தியால் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

பின்னர், போலீசுக்கு பயந்து அப்போதைய கல்பாளையம் கிராமநிர்வாக அதிகாரி கவிதா முன்னிலையில் சரண் அடைந்தார். உடனே இதுபற்றி மண்ணச்சநல்லூர் போலீசில் கிராம நிர்வாக அதிகாரி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாலசந்திரனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு திருச்சி மகிளா கோர்ட்டில் நீதிபதி என்.எஸ்.ஸ்ரீவத்சன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. இதில் சாட்சி விசாரணைகள் கடந்த 1-ந்தேதி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதில், பாலச்சந்திரன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக அவருக்கு இந்திய தண்டனை சட்டம் பிரிவு 302-ன்படி ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அத்துடன் அபராதத்தை கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறைதண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.

விடுதியில் படிக்கும் மகன்கள்

இதைத்தொடர்ந்து பாலச்சந்திரன் மருத்துவ பரிசோதனைக்கு பின்னர், மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் போலீசார் தரப்பில் அரசு சிறப்பு குற்றவியல் வக்கீல் ஜாகீர்உசேன் ஆஜரானார். தாயார் இறந்துவிட, தந்தை சிறை சென்றுவிட அவர்களின் 2 மகன்களும் தற்போது திருப்பராய்துறையில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்