மேட்டூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நகராட்சி ஊழியருக்கு ஆயுள் தண்டனை-சேலம் கோர்ட்டு தீர்ப்பு

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நகராட்சி ஊழியருக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.

Update: 2023-03-29 20:03 GMT

நகராட்சி ஒப்பந்த ஊழியர்

சேலம் மாவட்டம் மேட்டூர் ஆஸ்பத்திரி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மகன் நவீன்குமார் (வயது 28). இவர் மேட்டூர் நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தார்.

இவரிடம் அந்த பகுதியில் கூலி வேலை செய்து வரும் பெண் ஒருவர் அறிமுகமாகினார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி அந்த பெண்ணின் செல்போனுக்கு சார்ஜ் இல்லாததால் இவரிடம் சார்ஜ் போட்டு தரும்படி கூறி உள்ளார்.

அதற்கு அவர் உங்கள் மகளிடம் செல்போனை கொடுத்து அனுப்புங்கள் சார்ஜ் போட்டு கொடுத்து அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை நம்பி 12 வயது மகளிடம் செல்போனை கொடுத்து அனுப்பி உள்ளார். நவீன்குமார் சிறுமியை அந்த பகுதியில் உள்ள நகராட்சி குப்பை கொட்டும் கிடங்கிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

ஆயுள் தண்டனை

இது குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறி உள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் மேட்டூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நவீன்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நவீன்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்