வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தலைவாசல் அருகே வாலிபரை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2022-11-14 19:58 GMT

கட்டிட தொழிலாளர்கள்

சேலம் மாவட்டம் தலைவாசல் தெற்கு காட்டு கோட்டை வரகூர் பகுதியை சேர்ந்தவர்கள் பெருமாள் (வயது 49), அங்கமுத்து (54). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளர்கள். அவர்கள் கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் 15-ந் தேதி கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்கள் கும்பகோணம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்சில் சுற்றுலா சென்றனர்.

பஸ்சில் ஆட்கள் குறைவாக இருந்ததால் சங்கத்தில் இல்லாத 4 பேரை பெருமாள் சுற்றுலாவிற்கு அழைத்து சென்றார். பின்னர் அவர்கள் சுற்றுலாவை முடித்துவிட்டு 20-ந் தேதி திரும்பி கொண்டிருந்த போது பெருமாளிடம் சங்கத்தில் இல்லாத நபர்களை ஏன்? அழைத்து வந்தாய் என அங்கமுத்து கேட்டார். இதனால் பஸ்சுக்குள்ளே அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. உடன் சென்றவர்கள் அவர்களை விலக்கி விட்டனர்.

தகராறு

பின்னர் ஊர் திரும்பியதும் அங்கமுத்து தகராறு நடந்தது தொடர்பாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். இதனால் 22-ந் தேதி மீண்டும் பெருமாள் தரப்பினருக்கும், அங்கமுத்து தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது பெருமாள் மற்றும் அவரது மகன் அன்பழகன் (24) ஆகியோர் கட்டையால் தாக்கப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அன்பழகன் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

ஆயுள் தண்டனை

இந்த கொலை தொடர்பாக தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கமுத்து, அவருடைய மனைவி செல்வி, மகள் கவுதமி ஆகியோரை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 3-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடைபெற்றது.

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்ததால் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அன்பழகனை கொலை செய்த குற்றத்திற்காக அங்கமுத்துவுக்கு ஆயுள்தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெகநாதன் தீர்ப்பு அளித்தார். செல்வி, கவுதமி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்