மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
மனைவி கொலை
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை சேர்ந்தவர் ஜியாபத் (வயது 53), கூலி தொழிலாளி. இவரது மனைவி ரியாஸ்பி (42). இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். ரியாஸ்பி அவரது தந்தை வீட்டில் வாழ்ந்து வந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந்தேதி தனது மனைவியை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டிற்கு ஜியாபத் சென்றார். ஆனால் அவரது மனைவி வர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜியாபத் அருகே கிடந்த கத்தியை எடுத்து மனைவி ரியாஸ்பியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜியாபத்தை கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி கிறிஸ்டோபர் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.
அதில், கொலை செய்த ஜியாபத்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து ஜியாபத் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.