ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை

முன்விரோதத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.;

Update: 2023-09-07 18:31 GMT

நண்பர்கள்

புதுக்கோட்டை அய்யனார்புரம் 3-ம் வீதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மகன் தனேஷ்குமார் என்கிற சொலிஷன் (வயது 25). இவரும், போஸ் நகர் 9-ம் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் தமிழரசன் (35) என்பவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் தனேஷ்குமார் புதுக்குளம் தென்கரையில் வைத்து தமிழரசனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இதை மனதில் வைத்து கொண்டு கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 17-ந் தேதி தனேஷ்குமார் வீட்டிற்கு சென்ற தமிழரசன் அவரை மது அருந்த தனது ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார்.

குத்திக்கொலை

திருக்கட்டளை செல்லும் ரோட்டில் உள்ள பழைய கட்டிடத்தில் 2 பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தமிழரசன் தான் கையில் வைத்திருந்த மது பாட்டிலை உடைத்து தனேஷ்குமாரின் கழுத்தில் குத்தியுள்ளார். மேலும் அவர் கல்லை எடுத்து தனேஷ்குமாரின் தலையில் போட்டு கொலை செய்தார்.

இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்து புதுக்கோட்டை முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆயுள் தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி பூரண ஜெயஆனந்த் நேற்று தீர்ப்பு கூறினார். இதில் தனேஷ்குமாரை கொலை செய்த குற்றத்திற்காக தமிழரசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வெங்கடேசன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்