தொழிலாளியை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை

காதல் திருமணம் செய்த தகராறில் தொழிலாளியை வெட்டிக்கொன்ற 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பட்டுக்கோட்டை கோர்ட்டில் தீர்ப் பு கூறப்பட்டது.

Update: 2022-09-14 20:19 GMT

பட்டுக்கோட்டை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெருமாள் கோவில் தெரு செங்கமேடு பகுதியை சேர்ந்தவர் வீராசாமி(வயது 60). கூலித்தொழிலாளியான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் ஆனந்தராஜ்(32) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இளைய மகன் முருகேசன்(30) கூலி வேலை செய்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு முருகேசன், அவருடைய உறவினரான பட்டுக்கோட்டை கொண்டிகுளம் காமராஜர் காலனியை சேர்ந்த மதியழகன்(56) என்பவரது மகள் லாவண்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு வெளியூரில் வசித்து வந்தார்.

தகராறு

இதுதொடர்பாக மதியழகன் குடும்பத்தினருக்கும், வீராசாமி குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் திருமணம் முடிந்து ஒரு மாதம் கழித்து வெளியூரில் வசித்து வந்த முருகேசன்-லாவண்யா தம்பதியினர் பட்டுக்கோட்டைக்கு வந்தனர்.இதனை அறிந்த மதியழகன், வீராசாமி வீட்டுக்கு சென்று அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்துள்ளார். அதற்கு அடுத்த நாள் மதியழகன் மற்றும் அவரது அண்ணன் மகன் மூர்த்தி(32) ஆகிய இருவரும் இரவு நேரத்தில் வீராசாமி வீட்டுக்கு சென்று மீண்டும் தகராறு செய்துள்ளனர்.

வெட்டிக்கொலை

அப்போது இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மதியழகன், மூர்த்தி ஆகியோர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வீராசாமியின் பின்னந்தலையில் வெட்டினர். இதனை தடுக்க வந்த ஆனந்தராஜுக்கும் கையில் வெட்டு விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த வீராசாமி தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆனந்தராஜ் பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்து ஆனந்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை போலீசார் மதியழகன், மூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு பட்டுக்கோட்டை மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. கூடுதல் மாவட்ட நீதிபதி டி.வி மணி, குற்றம் சாட்டப்பட்ட மதியழகன், மூர்த்தி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுப்பு ஆறுமுகம் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்