கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடைகளின் உரிமம் ரத்து
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரி எச்சரித்துள்ளார்.;
தா.பழூர்:
அரியலூர் மாவட்டத்தில் தற்போது சம்பா சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்கள் தனியார் உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்தது. மேலும் யூரியா தட்டுப்பாடு நிலவுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவின்பேரில், வேளாண்மை இணை இயக்குனர் பழனிச்சாமி தா.பழூரில் செயல்படும் தனியார் உரக்கடைகளில் நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது உரக்கடைகளில் இருப்பு விவரம் பற்றியும், விலை பட்டியல் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார். பின்னர், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு உரம் விற்பது தெரியவந்தால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், ஒரு பொருளுடன், மற்றொரு பொருளையும் சேர்த்து வாங்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு அழுத்தம் தரக்கூடாது என்றும், விலைப்பட்டியலை முறையாக பராமரிக்க வேண்டும் என்றும், ரசீது இல்லாமல் உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகளை விற்கக்கூடாது என்றும், விதிமுறைகளை பின்பற்றாத உர நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து பிரதம மந்திரி கிஷான் திட்டம் தொடர்பாக வாழைக்குறிச்சி, அணிக்குறிச்சி ஆகிய கிராமங்களுக்கு சென்று விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது அத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், அதனை புதுப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதில் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.