இடிந்து விழும் நிலையில் நூலகம்

நீடாமங்கலத்தில் நூலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-12-06 19:00 GMT

நீடாமங்கலத்தில் நூலகம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த நூலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளை நூலகம்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் கடந்த 29.6.1963 அன்று தமிழக அரசின் பொதுநூலகத்துறை சார்பில் கிளை நூலகம் திறக்கப்பட்டது. வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த இந்த கிளை நூலகத்துக்கு 1998-ம் ஆண்டு சத்திரம் நிர்வாகத்துக்கு சொந்தமான ஒரு சென்ட் காலிமனையில் கட்டிடம் கட்டித்தரப்பட்டது.

இந்த கட்டிடம் கட்டி 25 ஆண்டுகள் ஆகின்றன. இங்கு போதுமான இடவசதி இல்லை. கடந்த சில ஆண்டுகளாக கட்டிடம் சேதம் அடைந்து காணப்படுகிறது. நூலகத்தின் சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு உள்ளன. தற்போது மழைக்காலமாக உள்ளதால் நூலக கட்டிடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.

35 ஆயிரம் புத்தகங்கள்

நூலக பணி நேரத்தில் நூலக கட்டிடம் இடிந்து விழுந்தால் உயிர்சேதம் ஏற்படும் ஆபத்து உள்ளது. 60 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த நூலகத்தில் 4,465 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். 68 புரவலர்கள் உள்ளனர். 35,179 புத்தகங்கள் உள்ளன. தினசரி 60 வாசகர்கள் இந்த நூலகத்துக்கு வருகிறார்கள்.

எனவே நீடாமங்கலம் அரசு கிளை நூலகத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய நூலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீடாமங்கலம் அரசு கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் குமார் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது-

மாற்று ஏற்பாடு

நீடாமங்கலம் கிளை நூலகத்தை ஏராளமான வாசகர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அரசு தேர்வுக்கு இந்த நூலகம் வந்து புத்ககம் படித்து தயாராகி தேர்வு எழுதுபவர்களும் உண்டு. புதிய நூலக கட்டிடம் கட்டும்வரை தற்போது பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் கிளை நூலகத்துக்கு மாற்று ஏற்பாடாக தமிழக அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஒன்றில் கிளை நூலகம் இயங்க ஏற்பாடு செய்து தரவேண்டும். நீடாமங்கலம் பழைய தாசில்தார் அலுவலகம் அருகில் இயங்கி்ய நில அளவை (சர்வேயர்) அலுவலகம் தற்போது காலியாக இருக்கிறது. அந்த கட்டிடத்தில் தற்காலிகமாக கிளை நூலகம் இயங்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்