நூலகம், சமுதாய கூடத்தில் செயல்படும் பள்ளிக்கூடம்

சீர்காழி அருகே திருப்புன்கூரில் நூலகம், சமுதாய கூடத்தில் செயல்படும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-06-17 15:15 GMT

சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருப்புன்கூர் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தேவி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி தனியார் ஓட்டு வீட்டில் செயல்பட்டு வந்தது. இந்த பள்ளியில் மானாந்திருவாசல், திருப்புன்கூர், நரிமுடுக்கு உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வந்தனர்.

ஆனால், இந்த பள்ளியை தொடர்ந்து நடத்த முடியாததால் சம்பந்தப்பட்ட தனிநபர் மூலம் கடந்த 2005-ம் ஆண்டு தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவர்கள் நலன்கருதியும், பெற்றோர்களின் வேண்டுகோளை ஏற்றும் திருப்புன்கூா் சமுதாய கூடத்தில் இந்தப்பள்ளி மீண்டும் தொடங்கப்பட்டது.

அடிப்படை வசதிகள் இல்லை

ஆனால், அந்த சமுதாய கூடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இருந்தாலும், இந்தப்பள்ளி ஆசிரியர் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களுக்கு கல்வி கற்றுத் தருவதால் மேலும் பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்த பள்ளியில் சேர்த்தனர். இதனால், மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதன் காரணமாக சமுதாய கூடத்தில் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரையும், சமுதாயக்கூடம் பின்புறமுள்ள நூலக கட்டிடத்தில் 4 மற்றும் 5-ம் வகுப்புகளும் நடைபெற்று வருகின்றன.

ஆசிரியர் பற்றாக்குறை

இந்தப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதால் ஒரு ஆசிரியர் மட்டும் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுக்கும் நிலை உள்ளது. இந்த பள்ளிக்கு கட்டிட வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக எவ்வித அடிப்படை வசதியும் இன்றி இப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார். தமிழக அரசு தற்போது கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேபோல, இந்த பள்ளிக்கும் அரசு கூடுதல் ஆசிரியர்களை நியமனம் செய்து அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்