விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்; மணிப்பூர் கலவரத்தை கண்டித்து நடந்தது;
மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட அமைப்பாளர் ஈழவளவன் தலைமை தாங்கினார். கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜமோகன், நிர்வாகிகள் சீசர், பாரதிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மணிப்பூரில் பழங்குடியின பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும், படுகொலைகளையும் கண்டுகொள்ளாமல் இருந்த மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல், மணிப்பூரில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை கண்டித்து, மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு சி.ஐ.டி.யூ. மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் நாகை திட்ட செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் மணிமேகலை, திட்ட கிளை செயலாளர் இளவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரவீந்திரன், செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் விஜய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.