விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கைது; போலீஸ் நிலையம் முற்றுகை

ஆரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.;

Update:2023-01-08 22:02 IST



ஆரணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர், ஒன்றிய செயலாளர் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்த கட்சியினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

கடை ஆக்கிரமிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு உள்ள அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்த மார்க்கப்பந்து என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டு வந்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்கபந்து இறந்துவிட்டார். அதைத்தொடர்ந்து அவரது மனைவி வைஜெயந்திமாலா, மகன் ஷாம்சுந்தர் ஆகியோர் அந்த கடைகளுக்கு வாடகை வசூலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த கட்டிடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகம், சின்னக்கண்ணு என்பவரது கடை உள்பட 3 கடைகள் உள்ளன. சின்னக்கண்ணு என்பவர் கடையை நடத்தாமல் பூட்டி வைத்துள்ளார். அந்த கடையின் சுவரை உள்பக்கமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் துளையிட்டு அகற்றியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னக்கண்ணு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் எம்.கே.பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ், முள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன் உள்பட 6 பேர் மீது ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்துள்ளார்.

2 பேர் கைது

அதன்பேரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.கே.பாஸ்கரன் மற்றும் நிர்வாகிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தியை சாதி பெயரை சொல்லி ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அதைத்தொடர்ந்து வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. முத்துச்சாமி உத்தரவின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் தலைமையில், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ரவிச்சந்திரன், மனோகரன் மற்றொரு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் கோகுல்ராஜன், புகழ், சாலமோன் ராஜா ஆகியோர் மேற்பார்வையில் முள்ளிப்பட்டு ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.கே.பாஸ்கரன், வடுகசாத்து கிராமத்தை சேர்ந்த ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

முற்றுகை-சாலை மறியல்

இதுபற்றி தகவல் அறிந்ததும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சிலர் ஆரணி மணிக்கூண்டு அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர். தொடர்ந்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் பணி செய்ய விடாமல் தடுத்ததாக சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில், எம்.கே.பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ் உள்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக கைது செய்யப்பட்ட இருவரையும் ஆரணி கோர்ட்டில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களை வேலூர் மத்திய சிறையில் 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர்கள் இருவரையும் கோர்ட்டு வளாகத்தில் இருந்து ஏற்றி சென்ற வேனை விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் வழிமறித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் அவர்களுக்கு போக்கு காட்டி விட்டு வேறு வழியாக வேனை அனுப்பி வைத்தார்.

இந்த சம்பவங்களால் ஆரணி நகரில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்