ஆலோசனை பெறுவது சிறந்தது - தமிழ்நாடு கவர்னருக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அறிவுரை

முடிவு எடுப்பதற்கு முன் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து கேட்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-06-30 06:32 GMT

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே, அமைச்சர் செந்தில்பாலாஜி வசமிருந்த மின்சாரம், மதுவிலக்கு ஆயத்தீர்வை உள்ளிட்ட அனைத்து துறைகளும் வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார். தமிழ்நாடு முதல்-அமைச்சர், அமைச்சரவையின் பரிந்துரையின்றி அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்கி கவர்னர் பிறப்பித்த உத்தரவு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அரசியலமைப்பு விதிகளை மீறி கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டதாக திமுக குற்றஞ்சாட்டியுள்ளது. அதேபோல், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகளும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியுன் தன்னிச்சையான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

அதேவேளை, சட்டவிரோத பண பரிமாற்றம், வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றது உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்ற நடவடிக்கைகளை அமைச்சர் செந்தில் பாலாஜி எதிர்கொள்கிறார். அமைச்சர் பதவியை துஷ்பிரயோகம் செய்துகொண்டு விசாரணைக்கு இடையூறு செய்கிறார்.

செந்தில் பாலாஜி தொடர்ந்து அமைச்சரவையில் நீடித்தால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள், நேர்மையான விசாரணை போன்றவற்றை கடுமையாக பாதிக்கும். இவை மாநிலத்தில் அரசியல் சாசன எந்திர முறிவை ஏற்படுத்தும். இதன் காரணமாக செந்தில்பாலாஜியை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் உத்தரவு பிறப்பித்த 5 மணி நேரத்திற்குள் தனது உத்தரவில் இருந்து கவர்னர் பின்வாங்கியுள்ளார்.

உள்துறை அமைச்சகத்திடமிருந்து வந்த அறிவுத்தல் வந்ததால் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கும் முடிவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி கடித்தம் எழுதியுள்ளார்.

முதல்-அமைச்சர் முக ஸ்டாலினுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி எழுதியுள்ள கடிதத்தில்,

செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரத்தில், தேவையற்ற ஆபத்தை தவிர்க்க முடிவு எடுப்பதற்கு முன் (prudent) மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து கேட்க வேண்டும் என்று உள்துறை மந்திரி எனக்கு அறிவுறுத்தியுள்ளார். ஆகையால் நான் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் கருத்தை கேட்க உள்ளேன். அதுவரை செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி பிறப்பித்த உத்தரவு அடுத்த உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. 




 


Tags:    

மேலும் செய்திகள்