பறவைகளின் பசி, தாகம் தீர்ப்போம்

கோடை வெயிலை யொட்டி வீட்டு மாடிகளில் நீரும், உணவும் வைத்து பறவைகளின் பசி, தாகத்தை தீர்க்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-03-05 18:45 GMT

விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிகுதியாகவே இருந்து வருகிறது. காலநிலை மாற்றத்தால் வருடா வருடம் கோடையின் உக்கிரம் அதிகரித்துக்கொண்டேதான் போகிறது. இந்த ஆண்டும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கிவிட்டது. மனிதர்களாலே இந்த வெயிலை தாங்க முடியவில்லை என்றால், சின்னஞ்சிறு பறவைகள் என்ன செய்யும்?

உணவு இல்லாமல்கூட கொஞ்சம் வாழலாம். நீரின்றி வாழ முடியாதே. எனவே நம்மையும், நம் பிள்ளைகளையும் காப்பதுபோல், நம்மைச்சுற்றி வாழும் சின்னஞ்சிறிய பறவைகளையும் காப்பாற்றுவோம். அவைகளின் தாகம் தீர்க்க வீட்டின் மொட்டை மாடிகளில் தண்ணீர் வைப்போம். தானியங்களைத் தூவுவோம். உணவுகளும் இடுவோம். மனிதநேயத்துடன் அதை இப்போதே தொடங்குவோம்.

இதுகுறித்து மனிதநேய ஆர்வலர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இங்கே பார்ப்போம்.

பறவைகள் இனத்தை காக்க வேண்டும்

திண்டிவனம் முரளிதரன்:- பருவகால மாற்றத்திற்கு ஏற்ப மனிதர்கள் தங்களுடைய தேவையை பூர்த்தி செய்து கொள்கிறார்கள். தற்போது கோடை காலத்தில் அதிக வெப்பம் பூமியை தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதிலிருந்து காத்துக்கொள்வதற்கு பல்வேறு யுக்திகளை அரசுகள் செய்து வருகின்றன. இந்த காலக்கட்டத்தில் பறவைகள், விலங்குகள் வாழும் பகுதிகளையும், நீர்நிலைகளையும் மனிதர்கள் ஆக்கிரமித்து கொண்டதால் பல்வேறு விதங்களில் விலங்குகளும், பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது விலங்குகள், பறவைகள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் தேடி அலையும் நிலை உருவாகியுள்ளது. சாதாரண மழைக்காலங்களில் ஓரளவுக்கு தங்களது தேவைகளை அவைகள் பூர்த்தி செய்துகொள்கின்றன. கோடை காலத்தில் வறண்ட நிலை நிலவும்போது உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் அலைகின்றன. மனிதர்களான நாம் நம்மை காத்துக்கொள்வதுபோல் மனித நேயத்துடன் தங்கள் வீட்டின் மாடி பகுதியில் குறைந்தபட்சம் பறவைகளுக்காகவாவது நீரும், உணவும் வைத்து உதவ வேண்டும். அதை வெயில்படாத இடத்தில் வைக்க வேண்டும். இதுபோன்று சிறிய உதவிகளை பறவைகளுக்கு செய்து பறவைகள் இனத்தை பாதுகாத்திட வேண்டும்.

விழுப்புரத்தை சேர்ந்த செல்வராஜ்:- கோடை காலம் வரும் முன்பே தற்போது வெயிலின் தாக்கம் ஆரம்பித்து விட்டது. இந்த தாக்கத்திலிருந்து நாம் தற்காத்துக்கொள்ளலாம். அதுபோல் நாம் வளர்க்கும் ஆடு, மாடுகளையும் காத்திடுவோம். ஆனால் யாருமற்ற பறவைகள் இந்த கோடை வெயிலில் தண்ணீர், உணவின்றி இறந்துபோய் விடாமல் நாம் காத்திட வேண்டும். அதற்காக நாம் அனைவரும் செய்ய வேண்டியது, நம் வீட்டு வாசல், மாடிகள், தோட்டங்களில் சிறிய பாத்திரங்களில் நீர் நிரப்பி வைத்தும், உணவு தானியங்களை வைத்தும், நாம் உண்டதுபோக மீதம் படும் உணவுகளை வைத்தும் பறவை இனங்களை காத்திடுவோம். இதனை அனைவரும் தவறாமல் செய்திட வேண்டும். நான் என் வீட்டு மாடியிலும், கார் ஷெட்டிலும் இதை செய்கிறேன். பறவைகளும் உயிரினங்களே. நாம் செய்யும் இந்த மனிதநேய செயலால் பல உயிர்களை காத்திடும் பாக்கியம் நமக்கு கிடைக்கும். எனவே அனைவரும் இதை தவறாமல் பின்பற்றி நம்மால் முடிந்த அளவில் பறவையினங்கள் அழியாமல் காத்திடுவோம்.

தேவை அதிகரிக்கிறது

மேல்மலையனூர் லிங்கேஷ்:-

கோடை காலம் வந்தாலே மனிதர்கள் மட்டுமல்லாது பறவைகள் மற்றும் விலங்குகள் ஆகியவற்றிற்கு தண்ணீரின் தேவை அதிகரிக்கிறது. காக்கைக்கு பெரும்பாலானோர் உணவு வைக்கின்றனர். அதேபோல் மற்ற பறவைகளுக்கும் நாம் உணவு அளிக்க வேண்டும். குறிப்பாக தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் நம் வீட்டின் வாசலிலோ அல்லது வீட்டின் மொட்டை மாடியிலோ பறவைகளுக்கு உணவு, தானியங்கள், தண்ணீர் ஆகியவற்றை வைக்க வேண்டும். நானும் என் வீட்டின் சிமெண்டு கூரை மீது வைத்துள்ளேன். அதை காகங்கள் மற்றும் சின்னஞ்சிறு குருவிகள் பயன்படுத்திக்கொள்கின்றன. பறவைகளுக்கு உணவு அளிப்பது மூலம் அந்த ஜீவன்கள் நம்மை வாழ்த்தும். பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைப்பது அனைவரும் செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

உலகம் நமக்கு மட்டும் கிடையாது

தியாகதுருகத்தை சேர்ந்த அக்பர் உசேன்:-தமிழகத்தில் வெப்பத்தின் அளவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வீடுகளில் இருந்து வெளியே வரும் பொதுமக்களின் தண்ணீர் தாகத்தை தீர்க்கும் வகையில் தற்போது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல்கள் அமைக்கப்படுகிறது. நம்மை போன்று பறவைகளுக்கும் தண்ணீர் தாகம் ஏற்படும். எனவே நாம் எப்படி பொதுமக்களுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கிறோமோ, அதே போல் பறவைகளுக்கும் தண்ணீர் கொடுக்க வேண்டியது அவசியம். அதன்படி நமது வீட்டின் மொட்டைமாடி பகுதி வீடுகளின் அருகில் உள்ள மரக்கிளைகளில் பறவைகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவைகள் அமரும் இடத்தில் சிறிய குவளைகளில் தண்ணீர் மற்றும் தானியங்களை வைக்கலாம். அவ்வாறு செய்தால் வெயில் காலங்களில் பறவைகளின் இறப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியும். இந்த உலகம் நமக்கு மட்டும் கிடையாது. விலங்கு, பறவை உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளுக்கும் உண்டு என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மனித இனத்திற்கு பேராபத்து

கள்ளக்குறிச்சியை சேர்ந்த பறவைகள் ஆர்வலர் கீர்த்தி செல்வராஜ்:- நாட்டில் பறவைகள் இனம் தற்போது அழிந்து வருகிறது. பறவைகள் பழங்களை தின்று அதன் எச்சீல் மூலம் மரம், செடி, கொடிகள் வளர்ந்து காடுகள் உருவாகிறது. இது ஒரு உணவு சங்கிலி ஆகும். பறவை இனங்கள் அழிந்தால் மனித இனத்திற்கு பேராபத்து வரும் சூழ்நிலை உருவாகும். எனவே பறவை இனங்களை விரைந்து கணக்கெடுப்பு செய்து அதனை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது வெயில் காலம் அதிகமாக இருப்பதால் ஆறு, குளம், குட்டை,ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வருவதால் பறவைகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் உயிரிழக்க நேரிடும். எனவே பொதுமக்கள் தங்களின் வீட்டு மாடி மற்றும் தோட்டங்களில் ஒரு டப்பா அல்லது பாத்திரத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க வேண்டும். மேலும் கல்வித்துறை பள்ளி,கல்லூரியில் மாணவர்களிடையே பறவை இனங்கள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இன்றே தொடங்கலாமே...

பல வீடுகளில் பறவைகளை தங்களது உறவுகளாவே வளர்த்து வரும் வேளையில், பறவைகளின் தாகம் தீர்க்க நாம் எடுக்கும் நல்ல நடவடிக்கைகளை நமது கடமையாகவும் பார்க்க வேண்டும். வாயில்லாத ஜீவன்களின் பசியை, தாகத்தை தீர்க்க இன்றே நல்ல நடவடிக்கையில் இறங்கலாமே!

Tags:    

மேலும் செய்திகள்