"ஒரு கை பார்த்து விடுவோம்" - கொள்ளையடிக்க போன வீட்டில் விருந்துண்டு மகிழ்ந்த கொள்ளையர்கள்

மதுரை கூடக்கோவிலில் உணவு மற்றும் பழங்களை சாப்பிட்டு விட்டு சாவகாசமாக கொள்ளையடித்த கொள்ளையர்களைப் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2022-05-30 12:12 GMT

மதுரை,

ஒத்தவீடு பகுதியில் வசித்து வரும் கட்டட தொழிலாளி சசிக்குமார் இரவு தனது கீழ் வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்துடன் காற்றோட்டமாக மாடியில் படுத்து உறங்கியுள்ளார்.

சமயம் பார்த்து வீட்டுக்குள் புகுந்த மர்ம ஆசாமிகள், ஊட்டத்துடன் கொள்ளையடிக்க-குளிர்சாதனப் பெட்டியில் இருந்து ஆரஞ்சு, ஆப்பிள் என்று அனைத்து பழங்களையும் வயிறார சாப்பிட்டு...அப்படியே சமையல் அறையில் இருந்த எஞ்சிய உணவையும் ஒரு பிடி பிடித்துள்ளனர். பசி மயக்கத்தில் திருடத் தேவையான "வெப்பன்சை" கொண்டு வர மறந்திருந்த கொள்ளையர்கள், வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று அங்கிருந்த தோசைக் கரண்டியை வைத்தே பீரோவை உடைத்து, 3 பவுன் தங்க நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தைக் களவாடியுள்ளனர்.

"வந்தது வந்து விட்டோம் பக்கத்து வீடும் திறந்து தான் இருக்கிறது, அங்கும் ஒரு கை பார்த்து விடுவோம்" என்று விவசாயி மாய கிருஷ்ணன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், மாய கிருஷ்ணனின் மூத்த மகள் இருளாயி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். சட்டென்று விழித்துக் கொண்ட இருளாயி கூச்சலிடவே அனைவரும் சுதாரிப்பதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

.எழுந்து பார்த்த சசிகுமாருக்கு அதிர்ச்சி...பீரோவில் இருந்த கொள்ளையடிக்கப்பட்டதைக் கண்டு போலீசாருக்குத் தகவல் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சேட்டை பிடித்த கொள்ளையர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்