அரசுப்பள்ளிகளை கொண்டாடுவோம் விழிப்புணர்வு பிரசாரம்

அரசுப்பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் அனிஷ்சேகர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-19 20:28 GMT

அரசுப்பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் அனிஷ்சேகர் தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பிரசாரம்

மதுரை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளிகளை கொண்டாடுவோம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பிரசாரம் வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. அதனை தொடர்ந்து, விழிப்புணர்வு பிரசாரத்தை மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் நேற்று தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா முன்னிலை வகித்தார்.

அதாவது அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்படுகிறது. இதற்காக தனி வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் அரசுப்பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பிரசாரம் செய்யப்படுகிறது.

திட்டங்கள்

அத்துடன், தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையில் செயல்படுத்தப்படும் எண்ணும் எழுத்தும் திட்டம், முதல் - அமைச்சரின் காலை உணவு திட்டம், அரசுப்பள்ளி மாணவிகளின் உயர் கல்விக்கான புதுமைப்பெண் திட்டம், திறன் வளர்ப்புக்கான தேன்சிட்டு என்னும் சிறார் இதழ் நூலகத் திட்டம், இலக்கிய மன்ற செயல்பாடுகள், அறிவியல் படைப்புகளை உருவாக்க வானவில் மன்றம், கலை திறனை வளர்க்கும் கலைத்திருவிழா, பள்ளி நேரம் முடிந்த பின்னும் கற்க விரும்பும் மாணவர்களுக்காக இல்லம் தேடி கல்வித்திட்டம், ஒவ்வொரு பள்ளியிலும் உயர் கல்விக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டி நான் முதல்வன்திட்டம் ஆகியவற்றை காட்சிப்படுத்தி இந்த பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இவற்றை விளம்பரப்படுத்தும் வகையில் பதாகைகள் மூலம் பொதுமக்களுக்கான விழிப்புணர்வு பேரணியும் நடத்தப்பட உள்ளது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

முன்னதாக மதுரை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பிரிவு சார்பில், 2023-24 கல்வியாண்டின் முதல் பருவத்துக்கான தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சிக்கு முன் திட்டமிடல் பயிற்சி வகுப்பு நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்மேகம், சரவணன், முருகன், துணை முதல்வர் ராமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சி வகுப்பானது, தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு வருகிற 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை அந்தந்த ஒன்றியங்களில் நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்