நீர்நிலைகளில் நீச்சல் தெரியாமல் ஆபத்தில் சிக்கி உயிர் இழப்பை தவிர்ப்போம்
நீர்நிலைகளில் உயிரிழப்புகளை தடுக்க என்ன செய்யலாம்? குழந்தைகளை எப்படி பாதுகாக்கலாம்? என்பது தொடர்பாக தீயணைப்பு அதிகாரி, நீச்சல் பயிற்சியாளர் உள்பட பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு. இனிமேல் என்ன ஒரே கொண்டாட்டம்தான்! குழந்தைகளோடு உற்சாகமாக சுற்றுலாவுக்கு பலரும் தயாராகிறார்கள்.
கோடையும்... கொண்டாட்டமும்
நகரத்தில் வசிப்பவர்கள் கிராமங்களில் இருக்கும் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்களை பார்க்க குழந்தைகளை அழைத்துச் செல்லவும் ஆயத்தமாகிறார்கள். கோடை என்றாலே குழந்தைகளுக்கு கொண்டாட்டம் தான். விடுமுறை விடும் முன்பே கோடை வெயில் கருணையின்றி தாக்கத் தொடங்கியது. சில நாட்கள் பெய்த மழை, கோடைக்கு இதம் அளித்ததே தவிர, வெப்பத்தை விரட்டி விடவில்லை. மழை ஓய்ந்த மறுநாளே வெப்பம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.
உயிர் குடிக்கும் நீர்நிலைகள்
கோடை வெயிலின் தாக்கத்தால் நீர்நிலைகளை தேடி மக்கள் படையெடுக்கின்றனர். அருவிகள், ஆறுகளில் உற்சாகமாக குளிக்கின்றனர். நீச்சல் தெரிந்தவர்களுக்கு நீர்நிலைகளில் தண்ணீர் இருந்தால் அது கோடைக்கு கொண்டாட்டம் தான். அதே நேரத்தில் நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் மற்றவர்கள் குளிப்பதை பார்த்து, உற்சாகம் ஊற்றெடுத்து நீருக்குள் இறங்குகின்றனர். ஆழம் குறைவாக இருந்தால் உற்சாகம் அவர்களையும் சூடிக் கொள்ளும். ஆழமான பகுதிக்கு சென்றால் ஆபத்தில் சிக்கி அவர்கள் உயிரை மாய்க்கின்றனர்.
நீச்சல் தெரியாதவர்கள் மட்டுமின்றி, நன்கு நீச்சல் தெரிந்தவர்கள் கூட, மற்றவர்களை காப்பாற்றச் சென்று உயிரிழந்த சம்பவங்களும் பல இடங்களில் நிகழ்ந்துள்ளன.
பறிபோன உயிர்கள்
தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஆறுகள், கண்மாய்கள், கிணறுகள், அருவிகள் என பல இடங்களுக்கு மக்கள் குளிக்கச் செல்கின்றனர். அதில் சில இடங்கள் ஆபத்தில்லா பகுதி என்றாலும், பல இடங்கள் குளிக்க தடை செய்யப்பட்டவை. உற்சாக மிகுதியில் தடை செய்யப்பட்ட இடங்களில் சென்று குளிப்பது தொடர்கிறது. பெற்றோருடன் குளிக்கச் செல்லும் போது பெற்றோரின் கவனக் குறைவாலும் குழந்தைகள் நீரில் மூழ்கி உயிர் இழக்கின்றனர்.
மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிர்ப்பலி ஏற்பட்ட பல சோக நிகழ்வுகள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெரியகுளம் அருகே கைலாசப்பட்டி பாப்பையன்பட்டி கண்மாயில் குளித்த போது நீரில் மூழ்கி 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கோவில் திருவிழாவுக்காக தங்கள் உறவினர் வீட்டுக்கு வந்தபோது இந்த சோகம் நேர்ந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போடி அருகே பெரியாற்றுக் கோம்பை பகுதியில் ஆற்றில் குளித்த புதுமணத் தம்பதி உள்பட 3 பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.
கடந்த 4-ந்தேதி குச்சனூர் அருகே கு.துரைச்சாமிபுரம் பகுதியில் முல்லைப்பெரியாற்றில் குளிக்கச் சென்ற 9 வயது சிறுவன் மற்றும் அவனுடைய 5 வயது தங்கை ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சில நாட்களுக்கு முன்பு பெற்றோருடன் தேனி பங்களாமேடு முல்லைப்பெரியாற்றில் குளிக்கச் சென்றபோது 1½ வயது ஆண் குழந்தை நீரில் மூழ்கி பலியானது. இது போன்ற சோக சம்பவங்கள் தொடர் கதையாகி இருக்கிறது.
நீச்சல் பயிற்சி
நீச்சல் தெரியாமல் நீர்நிலைகளுக்கு குளிக்கச் செல்வதும், நீச்சல் தெரிந்தாலும் தடை செய்யப்பட்ட இடத்தில் குளிப்பதும் ஆபத்தானது. எனவே இந்த கோடை விடுமுறையில் குழந்தைகளை நீர்நிலைகளுக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் குழந்தைகளை கையாள வேண்டும். நீச்சல் கற்றுக் கொடுப்பதும் சிறந்த செயலாக இருக்கும்.
நீர்நிலைகளில் உயிரிழப்புகளை தடுக்க என்ன செய்யலாம்? குழந்தைகளை எப்படி பாதுகாக்கலாம்? என்பது தொடர்பாக தீயணைப்பு அதிகாரி, நீச்சல் பயிற்சியாளர் உள்பட பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
உயிர் காக்கும் கலை
தேனி மாவட்ட நீச்சல் பயிற்சியாளர் விஜயகுமார் கூறும்போது, 'குழந்தைகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியமானது. நீச்சல் பயிற்சி என்பது மற்ற விளையாட்டுகளை போன்றது அல்ல. இது உயிர் காக்கும் கலை. நீச்சல் கற்றுக் கொண்டவர்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்வதோடு, பிறரின் உயிரை காப்பாற்றுகின்றனர். குழந்தைகளை நீர் நிலைகளில் அழைத்துச் செல்லும்போது பெற்றோர்கள் தங்கள் உற்சாகத்தில் குழந்தைகளை கவனிக்க தவறி விடுகின்றனர். பெற்றோர் கண்காணிப்பு இல்லாத போது குழந்தைகள் ஆர்வமிகுதியால் நீருக்குள் குதித்து ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர் எனவே நீர்நிலைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் அழைத்துச் செல்ல வேண்டிய சூழல் இருக்கும்போது குழந்தைகள் அருகில் பாதுகாப்புக்கு ஒருவர் இருக்க வேண்டும். நீச்சல் பயிற்சியை பொருத்தவரை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அரசே மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறது. தற்போது கோடைகால நீச்சல் பயிற்சி முகாமும் நடந்து வருகிறது. குழந்தைகளுக்கு படிப்போடு சேர்த்து நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டியதும் முக்கியமான ஒன்றாக இருக்க வேண்டும். நீச்சல் கற்பது உயிர் காக்கும் கலை என்பதோடு பல நோய்களை குணமாக்கும் சிகிச்சையாகவும் இருக்கிறது. மன அழுத்தம் குறைவதற்கு நீச்சல் அடிக்குமாறு டாக்டர்களும் அறிவுறுத்துகின்றனர். உடற்பயிற்சி கூடத்துக்கு சென்றால் கூட செல்போனோடு தான் இருக்கிறார்கள். ஆனால் நீச்சல் அடிக்கும் போது செல்போனிடம் இருந்து விலகி இருக்கிறார்கள். நீச்சல் அடிப்பதால் உடல் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் இருக்கும்' என்றார்.
பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்
தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார் கூறும்போது, ' மாவட்டத்தில் தீ விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை விடவும் நீர் நிலைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கிறது. தீ விபத்துக்கள் கூட எதிர்பாராமல் நிகழ்வது. ஆனால் நீர் நிலைகளில் ஏற்படும் விபத்துக்கள் எளிய முறையில் தவிர்க்கப்பட வேண்டியது. நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்ப்பதும், ஆபத்தான பகுதிகள் என்று தடை செய்யப்பட்ட இடங்களில் குளிப்பதை தவிர்த்தாலும் இது போன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் தவிர்க்கலாம். ஆற்றில் மூழ்கியவர்களின் உடல்கள் சில நேரங்களில் மீட்பதில் சிக்கல் ஏற்படும். ஓரிரு நாட்கள் இடைவிடாது தேடிய நிலையில் உடல்கள் மீட்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகளுக்கு கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும். வெளியூர்களுக்கு சுற்றுலா செல்லும் போது நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். ஆழம் தெரியாமல் காலை விடாதே என்பார்கள். எனவே நீர்நிலைகளில் எந்த இடத்தில் ஆழம் இருக்கும் என்பது புதிதாக வருபவர்களுக்கு தெரியாது. அதுபோல், கல்குவாரிகள் அமைத்த இடங்களில் உள்ள கல்குட்டைகள் மிகவும் ஆபத்தானவை. விளையாடச் செல்லும் சிறுவர்கள் அங்கு தேங்கி நிற்கும் நீரின் அழகை பார்த்த ஆனந்தத்தில் அதில் இறங்கி குளிக்கும் போது ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். ஆபத்தான கிணறுகளில் புறா பிடிக்கச் சென்று சிறுவர்கள் தவறி விழுந்தும் உயிரிழந்துள்ளனர். எனவே, சிறுவர்கள் இந்த விடுமுறை காலங்களில் குழந்தைகள் எங்கே விளையாடச் செல்கிறார்கள் என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். கோடை விடுமுறை காலங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ள பல்வேறு பயிற்சிகள் பல இடங்களில் அளிக்கப்படுகின்றன. நீச்சல் பயிற்சி, விளையாட்டு பயிற்சி, கணினி பயிற்சி போன்றவற்றை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம். நீர்நிலைகளில் ஏற்படும் ஆபத்துகள் குறித்து குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்' என்றார்.
நகராட்சி தோறும் நீச்சல் குளங்கள்
கம்பத்தை சேர்ந்த வியாபாரி சொக்கராஜா கூறும்போது, 'நீர்நிலைகளில் ஆபத்தை உணராமல் மக்கள் குளிக்கின்றனர். நீர்நிலைகளில் ஏற்படும் மரணம் என்பது பெரும் துயர் நிறைந்தது. ஒவ்வொருவரின் உயிரும் அவர்களது குடும்பத்தினருக்கு மிக முக்கியமானது. கம்பம் முல்லைப்பெரியாற்றில் தினமும் குழந்தைகளுடன் பலர் குளிக்க வருகின்றனர். பெற்றோர்கள் கண்காணிப்பு இல்லாமல் தனியாகவும் சிறுவர்கள் வந்து குளிக்கின்றனர். இது ஆபத்தான போக்கு. விடுமுறை என்பதால் குழந்தைகளை வீட்டுக்குள் அடைத்து வைக்கவும் முடியாது. நீச்சல் பயிற்சி அளிக்கலாம் என்றால் தேனிக்கு தான் போக வேண்டியது உள்ளது. எனவே நகராட்சி தோறும் நீச்சல் குளங்கள் அமைத்து பயிற்சி அளித்தால் பயனுள்ளதாக இருக்கும்' என்றார்.