ஊருக்குள் உலா வரும் சிறுத்தைகள்

அரவேனு பகுதியில் ஊருக்குள் சிறுத்தைகள் உலா வருவது அதிகரித்து வருகிறது. எனவே அவற்றை நிரந்தரமாக விரட்டியடிக்க வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2023-08-19 19:45 GMT

கோத்தகிரி

அரவேனு பகுதியில் ஊருக்குள் சிறுத்தைகள் உலா வருவது அதிகரித்து வருகிறது. எனவே அவற்றை நிரந்தரமாக விரட்டியடிக்க வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

வனவிலங்குகள் நடமாட்டம்

கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் பிரதான சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்றுச்சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக அரவேனு செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், அங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலைகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருகிறது.

சாலையில் உலா

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறுத்தை ஒன்று அந்த சாலை வழியாக மெதுவாக நடந்து சென்றது. பின்னர் அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தது. சிறுத்தை நடந்து செல்வதை கண்டு அங்குள்ள ஒருவரது வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்தது. இதனால் வீட்டின் உரிமையாளர் சந்தேகமடைந்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அப்போது சிறுத்தை சாலையில் நடந்து செல்வது பதிவாகி இருந்தது.

ஏற்கனவே இதே பகுதியில் கடந்த 7-ந் தேதி இரவில் கருஞ்சிறுத்தை ஒன்று உலா வந்தது குறிப்பிடத்தக்கது. தொடந்து சிறுத்தைகள் உலா வருவதால், அவை ஊருக்குள் வராமல் நிரந்தரமாக விரட்டியடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்