ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம்-சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை
ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.;
வால்பாறை
ரொட்டிக்கடை பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.
சிறுத்தைகள் நடமாட்டம்
வால்பாறையில் தென் மேற்கு பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தேயிலை தோட்ட பகுதிகள், சாலையோர பகுதிகளில் வளர்ந்து வரும் புற்களை தின்பதற்காக அதிகளவிலான மான்கள் வரத் தொடங்கி விட்டது. இந்த மான்களை வேட்டையாடுவதற்காக சிறுத்தை மற்றும் செந்நாய்கள் அதிகளவில் இரவில் நடமாடி வருகிறது. இந்த நிலையில் வால்பாறை அருகில் ரொட்டிக்கடை சுடுகாடு பகுதியில் உள்ள புதர் செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ள இடத்தில் தினந்தோறும் இரவில் சிறுத்தைகள் நடமாடி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சிறுத்தைப்புலிகள் இந்த இடத்திற்கு வந்து செல்வது வாடிக்கையாக இருந்து வருகிறது.
வால்பாறை சுற்று வட்டார பகுதியில் உள்ள தங்கும் விடுதி, லாட்ஜ் மற்றும் காட்டேஜ்களில் தங்க வரக்கூடியவர்கள் தவறாமல் வந்து செல்லக்கூடிய இடமாக இந்த ரொட்டிக்கடை சுடுகாடு பகுதி மாறிவிட்டது. குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை சுற்றுலா பயணிகள் இங்கு வந்து காத்திருக்கின்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை
அய்யர்பாடி, அப்பர் பாரளை சுற்று வட்டார பகுதியில் உள்ள வனப் பகுதியில் இருந்து வரக்கூடிய சிறுத்தைகள் குறிப்பாக இந்த இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணம் ரொட்டிக்கடை சுற்று வட்டார பகுதியில் உள்ள மாமிச கடை நடத்துபவர்கள் மாமிச கழிவுகளை இந்த இடத்தில் தொடர்ந்து கொட்டி வருவதால் அவைகளை தின்பதற்காக சிறுத்தைகள் அன்றாடம் வந்து செல்கிறது. இவ்வாறு வரக்கூடிய சிறுத்தைகள் அருகில் உள்ள வனத்துச்சின்னப்பர் ஆலய வளாக பகுதி, வால்பாறை -பொள்ளாச்சி சாலையில் நடமாடி வருகிறது. அதனால் ரொட்டிக்கடை சுடுகாடு பகுதியில் உள்ள புதர் செடிகளை அகற்றி மாமிச கழிவுகளை கொட்டுவதை தடுத்து நிறுத்தி இந்த இடத்தில் ஆபத்தை உணராமல் அன்றாடம் குவியும் சுற்றுலா பயணிகள் சிறுத்தைப்புலி தாக்குதலுக்கு உள்ளாகாமல் மனித -வனவிலங்கு மோதல் ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் வால்பாறை பகுதியைச் சேர்ந்த தேயிலை வியாபாரி ரெஜீஸ் அர்னால்டு தனது காரில் வரும் போது ரொட்டிக்கடை சுடுகாடு பகுதியில் உள்ள சுற்றுச்சுவரின் மீது சிறுத்தை பதுங்கி நின்றதை கண்டு உள்ளார். இதையடுத்து அவர், அந்த சிறுத்தையை தனது செல்போனில் படம் பிடித்து உள்ளார். சிறுத்தை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு அவர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளார்கள்.