கோத்தகிரியில் வீட்டு முன்பு படுத்திருந்த நாயை கவ்வி இழுத்து சென்ற சிறுத்தை - வைரல் வீடியோ
நாயை கழுத்தில் கவ்வி சிறுத்தை இழுத்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.;
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் வன விலங்குகள் வாழ ஏற்ற வகையில் உள்ளதால், தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டெருமை, முள்ளம் பன்றி, கரடி, காட்டுப்பன்றி, மான்கள், காட்டாடு உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து விடுகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகளால் அடிக்கடி மனித-வனவிலங்கு மோதல்கள் நிகழ்வதுடன், வீட்டு வளர்ப்பு பிராணிகளையும் வேட்டையாடி செல்கின்றன.
இந்தநிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் கோத்தகிரி அருகே உள்ள கூக்கல் பகுதியில் மாலை 3.30 மணிக்கு வீட்டின் வெளியே படுத்துக் கொண்டிருந்த வளர்ப்பு நாயை, பின்னால் இருந்து பதுங்கி நடந்து வந்த சிறுத்தை ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் அதன் கழுத்தை கடித்து, கவ்விச் சென்றது. நாயின் சத்தம் கேட்டு ஓடி வந்த அதன் உரிமையாளர் பலத்த சத்தம் போட்டார்.
சத்தத்தை கேட்ட சிறுத்தை, நாயை அங்கேயே விட்டு விட்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வளர்ப்பு நாயும் மயிரிழையில் உயிர் தப்பியது. இந்த காட்சிகள் அனைத்தும் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தன. இந்த கேமரா பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவத்தால் அந்த பகுதி கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். ஊருக்குள் புகுந்த அந்த சிறுத்தையை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.