வாகனம் மோதி சிறுத்தை பூனை சாவு
கொடைக்கானலில் வாகனம் மோதி சிறுத்தை பூனை இறந்தது.
கொடைக்கானல் பர்னஹில்ரோடு பகுதியில் சிறுத்தை பூனை குட்டி இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் உதவி வனப்பாதுகாவலர் சக்திவேல், வனச்சரகர் சிவகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். விசாரணையில், சாலையை கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுத்தை பூனை குட்டி இறந்தது தெரியவந்தது. பின்னர் கால்நடை டாக்டர் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் காட்டெருமை, காட்டுப்பன்றி உயிரிழந்த நிலையில் நேற்று சிறுத்தை பூனைக்குட்டி இறந்த சம்பவம் அரங்கேறியது. எனவே கொடைக்கானலில் வனவிலங்குகள் இறப்பது குறித்து வனத்துறையினர் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.