சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அடித்து கொன்றது
தளி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அடித்து கொன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை
தளி அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலி கன்றுக்குட்டியை அடித்து கொன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
சிறுத்தைப்புலி
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. இங்குள்ள வன விலங்குகள் அவ்வப்போது வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விடுவது வழக்கமாக உள்ளது. அதன்படி பன்னார்கட்டா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தைப்புலி ஒன்று நேற்று முன்தினம் தளி அருகில் உள்ள பூத்தனஅள்ளி கிராம குடியிருப்பு பகுதிகளில் சுற்றித்திரிகிறது.
இந்த காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறையினர் அப்பகுதிக்கு சென்று சிறுத்தைப்புலியின் கால் தடங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தைப்புலி நடமாட்டம் குறித்து கண்காணித்து வருகின்றனர்.
கன்றுக்குட்டியை அடித்து கொன்றது
இந்தநிலையில் தளி அருகே அருகே உள்ள பனசமான்தொட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜேஷ் என்பவரது கன்றுக்குட்டி நேற்று காலை கொட்டகையில் இருந்து காணாமல் போனது. இதையடுத்து அவர் கன்றுக்குட்டியை தேடி சென்றார். அப்போது அதேபகுதியில் உள்ள வயலில் கன்றுக்குட்டி இறந்து கிடந்தது. கொட்டகையில் இருந்த கன்றுக்குட்டியை சிறுத்தைப்புலி தூக்கி சென்று வயலில் அடித்து கொன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ராஜேஷ் ஜவளகிரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் வனச்சரக அலுவலர் சுகுமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது கொட்டகை மற்றும் வயலில் சிறுத்தைப்புலியின் கால்தடம் பதிந்து இருந்தது. இதையடுத்து வனப்பகுதியையொட்டி உள்ள பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைப்புலி சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.