லியோ 4 மணி காட்சி: உத்தரவிட முடியாது - சென்னை ஐகோர்ட்டு

லியோ படத்தின் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.

Update: 2023-10-17 06:45 GMT

சென்னை,

நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் திரையரங்குகளில் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகளுடன் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, வரும் 19 முதல் 24-ம் தேதி வரை திரையரங்குகளில் சிறப்பு காட்சி உட்பட தினசரி 5 காட்சிகள் திரையிடவும், காலை 9.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் அதிகாலை 1.30 மணிக்குள் 5 காட்சிகளை முடிக்க வேண்டும் எனவும் ஆணைகள் வெளியிட்டுள்ளன.

இத்திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கர்நாடகா, கேரள மாநிலங்களில் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் லியோவுக்கு அதிகாலை காட்சிக்கு அனுமதி பெற செவன் ஸ்கீரின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் கர்னல் கணேசன் ஐகோர்ட்டு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு அவசர முறையீடு செய்தார். படம் ரிலீஸ் ஆக இன்னும் சில நாட்களே இருப்பதால், இந்த வழக்கு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

அப்போது 19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம். ஆனால் 5 காட்சிகளுக்குதான் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என்றால் 18.45 மணி நேரம்தான் ஆகிறது. எனவே 6 காட்சிகள் திரையிடலாம் என தயாரிப்பு நிறுவன தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இதனிடையே அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. அதிகாலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டடுள்ளது என அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அனிதா சுமந்த் வழக்கு மாற்றப்பட்டது தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இன்று காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என அறிவித்தார்.

இந்தநிலையில், நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. 

விதிவிலக்கு அளிக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. அதன்படி எங்களுக்கு விலக்கு அளிக்கலாம் என பட தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.

அதனை தொடர்ந்து, கடந்த முறை ஒரு படத்திற்கு 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் உயிரிழந்தார், சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது. அதனை நாங்கள் பார்க்க வேண்டும், 9 மணிக்கு காட்சிகளை தொடங்க வேண்டும் என்பதுதான் அரசு வகுத்துள்ள விதி, அதனை மீற முடியாது. இடைவெளி நேரத்தை குறைத்துக்கொள்கிறோம் என பட தயாரிப்பு நிறுவனம் கூற முடியாது, தியேட்டர் நிர்வாகம்தான் கூற முடியும். லியோ படம் 2 மணி 45 நிமிடங்கள் நீளம் என தெரிந்திருந்தால் 5 காட்சிகளுக்கு அனுமதி அளித்திருக்க மாட்டோம் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க அனுமதி கோரி மனு அளிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது. அதனை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. லியோ படத்தின் 4 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என நீதிபதி அனிதா சுமந்த் கூறினார்.

ரசிகர்களுக்காகதானே அனைத்து காட்சிகளும் திரையிடப்படுகின்றன என நீதிபதி அனிதா பேச்சால் நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

Tags:    

மேலும் செய்திகள்