எலுமிச்சம் பழம் கிலோ ரூ.20-க்கு விற்பனை
எலுமிச்சம் பழம் கிலோ ரூ.20-க்கு விற்பனையால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம், மாங்காடு, அணவயல், பனங்குளம், குளமங்கலம், பேற்பனைக்காடு, நெய்வத்தளி, பெரியாளூர், பாண்டிக்குடி உள்பட கீரமங்கலத்தை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தென்னை உள்ளிட்ட தோப்புகளில் ஊடுபயிராக எலுமிச்சை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 5 டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, மதுரை உள்பட பல பெரு நகரங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
கீரமங்கலம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் எலுமிச்சை பழங்கள் கீரமங்கலம், கொத்தமங்கலம், பனங்குளம், கைகாட்டி, மறமடக்கி உள்ளிட்ட ஊர்களில் உள்ள காய்கனி கமிஷன் கடைகள் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களில் ஒரு கிலோ ரூ.180 வரை விற்பனை ஆனது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.40 வரை விற்பனை ஆன நிலையில், தற்போது கடும் வெயில் இருந்தும் கூட ஆங்காங்கே கனமழையும் பெய்வதால் குளிர்பானங்களின் விற்பனை பாதிக்கப்படுவதால் கடந்த சில நாட்களாக படிப்படியாக விலை குறைந்து கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து கீரமங்கலம் பகுதி விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் எலுமிச்சை பழம் விற்பனை மந்தமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் கிலோ ரூ.160 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் இதை விட மேலும் விலை உயரும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது விலை கடும் சரிவு ஏற்பட்டு கிலோ ரூ.20-க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றனர்.