சங்கரன்கோவில் பஸ்நிலைய கட்டுமான பணியை சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு

சங்கரன்கோவில் புதிய பஸ்நிலைய கட்டுமான பணியை சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.;

Update: 2023-09-09 18:45 GMT

சங்கரன்கோவில்:

தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழு அதன் தலைவர் வேல்முருகன் தலைமையில், சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை ஆய்வு செய்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், சட்டமன்ற செயலாளர் சீனிவாசன், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, சட்டமன்ற உறுதிமொழி குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமார், சதன்திருமலைகுமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு நடந்தது.

பின்னர் பேசிய குழு தலைவர் வேல்முருகன், சங்கரன்கோவில் பஸ் நிலைய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், 9 மாதங்களுக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து நெல்லை நகராட்சி மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, சங்கரன்கோவில் உதவி கலெக்டர் சுப்புலட்சுமி, நகராட்சி ஆணையாளர் சபாநாயகம், பொறியாளர் எட்வின், ஒப்பந்ததாரர் ஆகியோரிடம் தரமான முறையில் எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் கட்டிட பணிகளை முறையாக செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதேபோல் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது சுகாதார நிலையத்துக்கு தேவையானவை குறித்து கேட்டறிந்தனர். இந்த ஆய்வில், துணை இயக்குனர் முரளி சங்கர், வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்செல்வி, மருத்துவ அலுவலர் மாரிச்செல்வி, சித்த மருத்துவ அலுவலர் தேவி, பல் மருத்துவ அலுவலர் இந்துமதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்