சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு
குன்னூர் டேன்டீ தொழிற்சாலையில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
குன்னூர்
குன்னூர் டேன்டீ தொழிற்சாலையில் சட்டமன்ற பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு செய்தனர்.
தேயிலைத்தூள் உற்பத்தி
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் சவுந்தர பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமையில் 8 எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய குழுவினர் குன்னூர் டைகர்ஹில் பகுதியில் உள்ள டேன்டீ (தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழகம்) தேயிலை தொழிற்சாலையை நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அங்கு பச்சை தேயிலை கொள்முதல், தேயிலைத்தூள் உற்பத்தி, தரம் பிரித்தல், பேக்கிங், ஏற்றுமதி போன்ற செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
அப்போது குழு உறுப்பினர் கிரி எம்.எல்.ஏ., லாபத்தில் இயங்கிய டேன்டீ நிறுவனம் நஷ்டம் ஆகாமல் இருக்க முயற்சி எடுத்து உள்ளீர்களா?. அரசு நிறுவனம் என்றால் மட்டும் நஷ்டமாக வேண்டுமா?. லாபகரமான தொழிலை ஏன் லாபகரமாக கொண்டு செல்லவில்லை. தேயிலைத்தூள் உற்பத்தியை குறைத்து விட்டு அரசையும், தொழிலாளர்களையும் குறை கூறுகிறீர்கள் என்று அதிகாரிகளிடம் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குழுவினர் ஆய்வு
இதைத்தொடர்ந்து ஊட்டி படகு இல்லத்தில் ரூ.3.20 கோடியில் கட்டப்பட்டு வரும் மர வீடு உணவகத்தை குழுவினர். ஆய்வு மேற்கொண்டனர். அந்த பணிகளை விரைந்து முடித்து சுற்றுலா பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அறிவுறுத்தினர். பின்னர் சிங்காராவில் 150 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பைக்காரா இறுதி நிலை நீர் மின் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது குழு உறுப்பினர்களும், எம்.எல்.ஏ.க்களுமான அப்துல் சமீது, ஆனந்தன், உடுமலை ராதாகிருஷ்ணன், கோவிந்தசாமி, பிரகாஷ், பூண்டி கே.கலைவாணன், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், குழு இணை செயலாளர் பாண்டியன், ஆர்.டி.ஓ.க்கள் பூஷணகுமார், மகாராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.