சட்டமன்ற பொதுகணக்கு குழு ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு கூட்ட்டம் நடந்தது.

Update: 2022-08-26 17:49 GMT

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழு ஆய்வு கூட்ட்டம் நடந்தது.

ஆய்வு கூட்டம்

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்ட மன்ற பொதுகணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. பொதுகணக்கு குழு உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ், ஈ.ராஜா, வேல்முருகன், அ.நல்லதம்பி, இணைசெயலாளர் தேன்மொழி, துணை செயலாளர் ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் மாவட்டத்தில் நடைபெற்று வரும் ஊரக வளர்ச்சி, தோட்டக்கலை, வேளாண்மை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை, மீன்வளம், சுற்றுலா, அறநிலையத்துறை, மக்கள் நல்வாழ்வுதுறை, வருவாய், உயர்கல்வித்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பணிகள் குறித்தும், அரசின் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிகள் முறையாக மக்களை சென்றடைகிறதா என்பது குறித்தும் அனைத்துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினர்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக்குனர் செல்வராசு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், மகளிர் திட்ட அலுவலர் உமாமகேஸ்வரி, வருவாய் கோட்டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

அதைத்தொடர்ந்து பொதுகணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

விளக்கம் கேட்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. அரசின் அனைத்து திட்டங்களும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். ஏலகிரி மலையில் இன்னும் நிறைய வசதிகள் செய்யப்பட வேண்டும். பொதுகணக்கு குழுவினர் நடத்திய ஆய்வில் எஸ்.கோடியூர் பகுதியில் உள்ள ஆரம்பசுகாதார நிலையத்தில் மருந்து, மாத்திரைகள் இருப்பை விட, அளவுக்கு அதிகமாக உள்ளது. இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ அதிகாரிகள் மருந்து இருப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளோம். மேலும் சென்னைக்கு வரவழைத்து விசாரணை நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஏலகிரிமலையில் ஆய்வு

பொது கணக்கு குழு தலைவர் கு.செல்வபெருந்தகை தலைமையிலான உறுப்பினர்கள் ஏலகிரி மலை மற்றும் ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அத்தனாவூர் பழங்குடியினர் உண்டு உறைவிட ஆரம்பப்பள்ளியில் பயிலும் மாணவர்களுடன் கலந்துரையாடி விடுதியில் உணவுகள் தரமாக வழங்கப்படுகிறதா என மாணவர்களிடம் கேட்டறிந்து, மின்சாரம், கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர். மேலும், அதேபகுதியில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் மாணவ, மாணவியர் விடுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் ரோஜா சாகுபாடி பசுமை குடில் அமைத்து, வளர்க்கப்பட்டு வரும் ரோஜா தோட்டத்தை பார்வையிட்டு, ரோஜா சாகுபடி செய்யும் விதம் குறித்து கேட்டறிந்தனர். ஏலகிரிமலை படகு இல்லத்தையும் பார்வையிட்டு நவீனபடகு குளத்தை சீரமைத்து வெளிநாட்டு பயணிகளை ஈர்க்கும் வகையிலும், பயணிகள் பாதுகாப்பான முறையில் படகு சவாரி செய்யவும், கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.

ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து இருப்புகள் குறித்த பதிவேடு முறையாக பராமரிக்காதது குறித்து இணை இயக்குனர் ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டனர். ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், ஏலகிரி மலை ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், வட்டார வளர்ச்சி அலுவர்கள் தினகரன், முருகேசன். உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்