சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனங்கள்

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனங்களை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-03 16:49 GMT

அடிப்படை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணைக்குழு ஆகியவை உத்தரவிட்டது. அதன்படி திண்டுக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான தொடக்க நிகழ்ச்சி மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சிவகடாட்சம் தலைமை தாங்கினார். செயலாளர் பாரதிராஜா முன்னிலை வகித்தார்.

அதையடுத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வழங்கப்பட்ட 2 பிரசார வாகனங்களில் ஒரு வாகனத்தில் சட்ட விழிப்புணர்வு தொடர்பான வீடியோ ஒளிபரப்பப்பட்டது. இதனை மாவட்ட நீதிபதி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் கோர்ட்டுக்கு வந்த பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட நீதிபதி வழங்கினார். இதைத்தொடர்ந்து பிரசார வாகனத்தை கொடியசைத்து மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார். இந்த பிரசார வாகனங்கள் மாவட்டத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்