"கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை"- ஜான்பாண்டியன் வலியுறுத்தல்

“கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2023-05-19 20:12 GMT

"கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

அதிகாரிகள் மீது நடவடிக்கை

தமிழகத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அனைத்து இடத்திலும் உள்ளது. சமீபத்தில் மரக்காணத்தில் நடந்த சம்பவம் அநியாயமான கொலையே. தமிழகத்தில் மக்கள் அனைவரும் மதுவை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிட்டும் தமிழக அரசு செவிசாய்க்க மறுப்பது வருத்தத்துக்கு உரியது.

கள்ளச்சாராயம் விற்பனையை தடுக்க தவறிய அதிகாரிகளை ஒன்றும் செய்யாமல் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தவறானது. இதற்கு யாரெல்லாம் பொறுப்போ அவர்கள் மீது தமிழக அரசு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூரண மதுவிலக்கு

கள்ளச்சாராயம் குடித்து உயிர் இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் கொடுப்பது கேவலமான ஒன்று. இது குடிகாரர்களை ஊக்குவிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும். இந்த நிகழ்வை வைத்து நாங்கள் அரசியல் செய்யவில்லை. மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது வரவேற்கத்தக்கது. வேங்கைவயல் கிராம பிரச்சினையை அரசு மூடி மறைக்க பார்க்கிறது. அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதற்காக காவல்துறை அதிகாரிகள் மீதான புகார்கள் மூடி மறைக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள சாராய ஆலையை மூடினாலே பாதி பிரச்சினை குறைந்து விடும்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்

தேர்தல் அறிவித்த பின்னர் எங்களின் கூட்டணி குறித்து தெரிவிக்கப்படும். நான் எந்த கூட்டணியில் இருந்தாலும் தவறு என்றால் கண்டிப்பாக கண்டனம் தெரிவிப்பேன். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தது வருத்தப்பட வேண்டிய ஒன்று. அதே சமயம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு என்று ஒரு வார்த்தைகூட இல்லை. அப்படி இருக்கும்போது ஆலை மூடப்பட்டதால் ஒரு லட்சம் பேர் வேலை இழந்து பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இந்த அரசு ஒன்றும் செய்யவில்லை. தற்போது வெளிநாட்டில் இருந்து காப்பர் இறக்குமதியால் நமக்கு பல கோடி நஷ்டம் தான். எனவே, அந்த ஆலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக 10, 11-ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பேட்டியின்போது தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில துணை பொதுச்செயலாளர் சண்முகசுதாகர், மாநில மகளிர் அணி செயலாளர் நளினி சாந்தகுமாரி, நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்