ஆசைகளை புறந்தள்ளி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்

ஆசைகளை புறந்தள்ளி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று மாணவிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

Update: 2022-11-23 11:53 GMT

ஆசைகளை புறந்தள்ளி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்று மாணவிகளுக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் அறிவுரை வழங்கினார்.

விழிப்புணர்வு கூட்டம்

வேலூர் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இணைய குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் வேலூர் டி.கே.எம். கல்லூரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கி பேசியதாவது:-

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இந்த குற்றங்கள் யார் மூலம் நடக்கிறது என்பது நமக்கு தெரியும். அப்படி நடந்து கொள்பவர்களை முன்கூட்டியே அறிந்து அவர்களை நாம் பார்க்கக்கூடாது. அவர்களை விட்டு விலகிவிட வேண்டும்.

ஆசைகளை புறந்தள்ளி...

நீங்கள் உங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும். தேவையில்லாத விஷயங்கள் குறித்து மனதில் ஆசை வளர்த்துக் கொள்ள வேண்டாம். உங்கள் குறிக்கோளை நோக்கி பயணிக்க வேண்டும். பயணிக்கும் போது பல்வேறு இடையூறுகள் வரும். அப்போது கவனத்தை சிதற விடாமல் உங்கள் குறிக்கோளை மட்டுமே மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். வாழ்வில் தற்காலிகமாக சின்னஞ்சிறு ஆசைகள் பல பிறக்கும். அதை புறந்தள்ள வேண்டும். அவ்வாறு புறம் தள்ளி இலக்கை நோக்கி பயணித்தால் நீங்கள் சமுதாய கட்டமைப்பை உருவாக்கும் இடத்திற்கு செல்வீர்கள்.

கல்லூரி காலங்களை கடந்து தான் நாங்கள் இங்கு வந்திருக்றோம். கல்லூரி படிக்கும் காலத்தில் திருமணம் செய்து கொண்ட சிலர் ஒருவேளை சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் கஷ்டப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். இந்த நிலை உங்களுக்கு வந்துவிடக்கூடாது. பிரச்சினைகள் வந்தால் தைரியமாக போராட வேண்டும். அதுகுறித்து துணிந்து புகார் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, கல்லூரி தாளாளர் மணிநாதன், தாசில்தார் செந்தில்குமார், சமூகநலத்துறை அலுவலர் கோமதி (பொறுப்பு), சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் அபர்ணா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி, வக்கீல் சுமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குற்றங்கள் குறித்து புகார் தெரிவிக்க புகார் எண் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வெளியிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்