மூவேந்தர்களின் வம்சாவழியினர் நாடார்கள் என்பதற்கு ஆதாரமான ஓலைச்சுவடி கண்டுபிடிப்பு-பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன்
மூவேந்தர்களின் வம்சாவழியினர் நாடார்கள் என்பதற்கு ஆதாரமான ஓலைச்சுவடி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறினார்.
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது:-
ஓலைச்சுவடி
19-ம் நூற்றாண்டில் பதிப்பிக்கப்பட்ட ஓலைச்சுவடிகள் வழியாகத்தான் தமிழரின் பழம்பெருமை உலகுக்குத் தெரிந்தது. இதனால் ஓலைச்சுவடிகளை தேடி தொகுத்து பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியை சேர்ந்த தவசிமுத்துமாறன் என்பவரிடம் இருந்து 14 அரிய ஓலைச்சுவடிகள் கிடைத்தன.
அதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த "ஆதி பூர்வீக மண்டல் காட்டு ராசாவாகிய மூலப்புலிக்கொடியோன் பூர்வீக வரலாறு" எனும் ஓலைச்சுவடியும் கிடைத்து உள்ளது. அந்த சுவடியில் காலம் மற்றும் நூலை இயற்றிய ஆசிரியர் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. ஆனாலும் பிரதி ஓலைச்சுவடியின் பழமை வடிவ நிலை அடிப்படையில் சுவடி எழுதப்பட்டது. சுமார் 100 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. மூலச்சுவடியின் காலம் அதற்கும் முந்தையது என்பதில் ஐயம் இல்லை. எனினும் நூலில் உள்ள வரலாறுகள் நடைபெற்ற காலம் 11-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலானது ஆகும்.
மூவேந்தர்களின் வழித்தோன்றல்கள்...
இந்த சுவடியில் மூவேந்தர்களின் வழித்தோன்றல்கள் நாடார்கள் என்பதை உறுதிபடுத்தும் வகையிலான கருத்துகள் உள்ளன. சோழர் குல வலங்கை சான்றோர் மக்களின் தோற்றவரலாறு இந்த சுவடியின் முதல் பகுதியில் கூறப்பட்டு உள்ளது.
இந்த சுவடி புலிக்கொடியோனின் வம்சாவழியினரின் வரலாற்றை சுருக்கமாகக் கூறுகிறது. இந்த நூலை இயற்றியவர் வித்துவான் ச.செந்தமிழ்ச்செல்வன் என்பதை அறிய முடிகிறது. கிடைத்துள்ள சுவடி சோழர் வரலாற்றுடன் தொடர்புடையது என்பதால் வரலாற்று முக்கியத்துவமானதாக அமைந்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.