தேவூர்:-
தேவூர் அருகே பாலிருச்சம்பாளையம் செட்டியார் காடு, சென்றாயனூர், மேட்டுப்பாளையம், அம்மாபாளையம், வெள்ளாளபாளையம், கோனேரிப்பட்டி, புதுப்பாளையம், காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, குள்ளம்பட்டி, தண்ணிதாசனூர், கோணகழுத்தானூர், காவேரிப்பட்டி, செட்டிபட்டி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் நேந்திரம், செவ்வாழை, பூ வாழை, கதலி, ரஸ்தாளி, மொந்தன் வாழைகளை சாகுபடி செய்துள்ளனர்.
இந்நிலையில் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது வாழை மரங்களில் இலைகள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இந்த பாதிப்புகள் குறித்து தகவல் கிடைத்ததும், சங்ககிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் விஷ்ணு பிரியா மற்றும் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் ராஜா, குப்புசாமி ஆகியோர் தேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் வாழையில் இலை கருகல் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தனர். மேலும் வாழையில் இலைகருகலை தடுக்க பாதுகாப்பு மருந்துகளை விவசாயிகளுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.