"வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்" ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி பேச்சு

“வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கோவில்பட்டியில் நடந்த மூத்த வக்கீல் பரமசிவம் படம் திறப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி கூறினார்.

Update: 2022-10-15 18:45 GMT

கோவில்பட்டி:

"வக்கீல்கள் சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கோவில்பட்டியில் நடந்த மூத்த வக்கீல் பரமசிவம் படம் திறப்பு விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி புகழேந்தி கூறினார்.

திறப்பு விழா

கோவில்பட்டி சப்-கோர்ட்டு வளாகத்தில் உள்ள வக்கீல்கள் சங்க கட்டிடத்தில் மூத்த வக்கீல் ஆர்.பரமசிவம் பெயரில் நூலகம் மற்றும் அவரது உருவப்பட திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பி.புகழேந்தி வரவேற்று பேசினார். ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் நூலகத்தை திறந்து வைத்தார்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ மூத்த வக்கீல் ஆர்.பரமசிவம் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

விழாவில் நீதிபதி புகழேந்தி பேசியதாவது:-

சட்ட நுணுக்கங்கள்

சென்னை ஐகோர்ட்டு கிளை மதுரைக்கு வந்த பிறகு, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்த வக்கீல்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய வகையில் தான் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அந்த காலத்தில் பல்வேறு வழக்குகளுக்கு சென்னை ஐகோர்ட்டுக்கு சென்று வாதாடினோம். ஆங்கில அறிவு குறைவு என்பதால் பலரும் ஐகோர்ட்டில் வாதாட தயக்கம் காட்டுகின்றனர்.

மூத்த வக்கீல் பரமசிவம் நினைவாக அவரது உருவப்படம் மற்றும் நூலகம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. இந்த நூலகத்தை அனைத்து வக்கீல்களும் பயன்படுத்தி சட்ட நுணுக்கங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தீர்ப்பு முதன்மையானது

வைகோ பேசுகையில், 'மூத்த வக்கீல் பரமசிவமும், நானும் கல்லூரி நண்பர்கள். கோவில்பட்டி கோர்ட்டில் இருவரும் பணியாற்றி உள்ளோம். நீதி எல்லோருக்கும் உரியது. மக்கள் மன்றத்தின் தீர்ப்பு தான் முதன்மையானது. 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு நீதி இருந்தது. நீதியை மதிக்கும்‌ மாண்பு இங்கு உள்ளது. நீதிமன்றங்களில் போராடியவர்கள், நீதிக்காக போராடியவர்கள், மனித குலத்திற்காக போராடியவர்கள் பலர் உள்ளனர். கோவில்பட்டி ‌கோர்ட்டு புகழ்வாய்ந்தது'‌ என்றார்.

முன்னாள் தமிழக அரசு கூடுதல் தலைமை வக்கீல் கே.செல்லபாண்டியன், முன்னாள் மத்திய அரசு துணை தலைமை வக்கீல் வி.கதிர்வேலு, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன் ஆகியோரும் பேசினார்கள். விழாவில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, கோவில்பட்டி சப்-கோர்ட்டு நீதிபதி ரத்தினவேல்பாண்டியன், மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் கடற்கரை செல்வம், பீட்டர், முகமது சாதிக் உசேன், அரசு வக்கீல்கள் சம்பத்குமார், ராமச்சந்திரன், மூத்த வக்கீல்கள் சந்தனம், பாப்புராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி செயலாளர் விநாயகா ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்