பார் கவுன்சில் உறுப்பினர்களை அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வக்கீல்கள் மனு

தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர்-உறுப்பினர்களை அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வக்கீல்கள் மனு அளித்தனர்.

Update: 2023-02-01 19:13 GMT

பெரம்பலூர் மாவட்ட பார் அசோசியேஷன் (குற்றவியல்) தலைவர் வக்கீல் வள்ளுவன் நம்பி தலைமையில், அச்சங்கத்தை சேர்ந்த வக்கீல்கள் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியனை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தனர். அதில், சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த டி.கே.சத்தியசீலன் என்பவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதை மறைத்து, கடந்த 2014-ம் ஆண்டு தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலில் தன்னை வக்கீலாக பதிவு செய்து கொண்டு, இதுநாள் வரை வக்கீல் தொழில் செய்து வந்தார். அவர் மீது தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சிலில் புகார் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் மீதான குற்ற பின்னணியை ஆராய்ந்து உறுதி செய்து, அவர் மீது கடந்த 28-ந்தேதி பார் கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றி, அவர் வக்கீல் தொழில் செய்திட பார் கவுன்சில் தடை விதித்து நடவடிக்கை எடுத்தது. இந்த இடை நீக்கத்தை எதிர்த்து உரிய நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திட சட்ட நடவடிக்கை மேற்கொள்ளாமல் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், அகில இந்திய பார் கவுன்சில் துணைத்தலைவர் பிரபாகரன் மீதும் மற்றும் பார் கவுன்சில் உறுப்பினர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சத்தியசீலன் கடந்த 29-ந்தேதி மாலை சமூக வலைத்தளமான வாட்ஸ்-அப்பில் சில குழுக்களில் அவதூறு பரப்பியும், தகாத வார்த்தைகளில் மிரட்டல் விடுத்து தனது செல்போன் வழியே குரல் குறுஞ்செய்தி பதிவிட்டு பரப்பி வருகிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்