3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாமக்கல் மாவட்டத்தில் கொலை வழக்குகளில் கைதான 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
நாமக்கல்:
கொலை சம்பவங்கள்
ராசிபுரம் வெங்கடசாமி தெருவில் கடந்த மாதம் 13-ந் தேதி கூலித்தொழிலாளி ஈஸ்வரன் (வயது 26) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மற்றொரு கூலித்தொழிலாளி ஜெயமணிகண்டன், ஈஸ்வரனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஜெயமணிகண்டனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல் நாமக்கல் செல்லப்பா காலனி பகுதியில் கடந்த மாதம் 13-ந் தேதி இரவு நாமக்கல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கார் டிரைவர் பிரபாகரனுக்கும் (29), அவரது நண்பர் சுரேந்தருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் சுரேந்தர் தலைமையில் ஒரு கும்பல், டிரைவர் பிரபாகரனை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தது.
3 பேர் மீது குண்டர் சட்டம்
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் பிரபாகரனின் நண்பர் சுரேந்தர், சபீன் (22), கிருஷ்ணமூர்த்தி (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே நாமக்கல் மாவட்டம், நாமக்கல் மற்றும் ராசிபுரத்தில் நடந்த இருவேறு கொலை வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ளவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, கலெக்டர் ஸ்ரேயாசிங்கிற்கு பரிந்துரை செய்திருந்தார்.
இந்த நிலையில் ராசிபுரம் கூலித்தொழிலாளி ஈஸ்வரன் கொலை வழக்கில் கைதாகி சேலம் மத்திய சிறையில் இருந்த ஜெயமணிகண்டனையும், நாமக்கல் கார் டிரைவர் பிரபாகரன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சுரேந்தர் மற்றும் சபீன் ஆகிய 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அந்த உத்தரவின் நகலை நாமக்கல் மாவட்ட போலீசார் சேலம் மத்திய சிறையில் ஒப்படைத்தனர்.