மாணவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிவிழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டம்

மாணவரை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-02-14 18:45 GMT


கோவை மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் ஹரிகரன் (வயது 23). இவர் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர், நண்பர்கள் சிலருடன் புதுச்சேரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள காந்தி வீதிக்கு செல்ல அவர் ஒருவழிப்பாதை வழியாக திரும்பியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு சாதாரண உடையில் இருந்த போலீசார், மாணவர் ஹரிகரனின் வாகன சாவியை பிடுங்கினர். அப்போது ஹரிகரன், அந்த போலீசாரிடம் தான், சட்டக்கல்லூரி மாணவர் என்று அறிமுகம் செய்துகொண்டதோடு சாதாரண உடையில் இருக்கும் நீங்கள் எப்படி வாகன சாவியை பிடுங்கலாம் என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த போலீசார், மாணவர் ஹரிகரனை திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ஹரிகரன், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்ததும் விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள், புதுச்சேரி சென்று உருளையன்பேட்டை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவர் ஹரிகரனை தாக்கிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இருப்பினும் போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது.

மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

இந்நிலையில் நேற்று காலை விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரிக்கு வந்த மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டோர், திடீரென வகுப்பை புறக்கணித்து போராட்டம் செய்தனர். அப்போது மாணவர் ஹரிகரனை தாக்கிய புதுச்சேரி போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பியபடி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்கள் அனைவரும் மதியம், விழுப்புரம் அரசு சட்டக்கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து புகார் மனு கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்