தி.மு.க. ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்துள்ளது -எடப்பாடி பழனிசாமி அறிக்கை
தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது என்றும், ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்டும் தருணத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
அ.தி.மு.க. ஆட்சியில், ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக போற்றப்பட்ட தமிழக காவல்துறை, மக்களை அச்சுறுத்தி வந்த சட்டவிரோதிகளை ஒழித்த காவல்துறை, இன்றைக்கு திராவக மாடல் ஆட்சியாளர்களின் கைகளில் சிக்கி சீரழிந்து வருவது கண்டு மக்கள் கொதிப்படைந்து போயுள்ளனர். கடந்த 29 மாத கால தி.மு.க. ஆட்சியில், நாட்டில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்துள்ளது.
பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் என்று நினைப்பது போல், அதிகார மமதையில் கண்ணை மூடிக்கொண்டு, தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று காவல் துறையை கையில் வைத்திருக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்கிறார் என்றால், ஆமாம், ஆமாம் என்று முழு பூசணிக்காயை தட்டு சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர் தமிழகக் காவல் துறை உயர் அதிகாரிகள்.
போதை பொருள்
நேர்மையான காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தாக்கப்படுவது, கொல்லப்படுவது, தாழ்த்தப்பட்டவர்கள் மீது நடக்கும் தாக்குதல்கள், போதைப் பொருள் கேந்திரமாக மாறும் தமிழகம், ஆளும் கட்சி நிர்வாகிகளால் பாலியல் பாதிப்புக்குள்ளாகும் பெண் போலீசார், பாதுகாப்பு குறைபாடு காரணமாக மாநிலத்தின் முதல்-அமைச்சரே சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசலில் திணறிய நிகழ்வு என்று, தி.மு.க. ஆட்சியின் ஒருசில சீர்கேடுகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.
நான் சட்டசபையில் பேசும்போது, போதைப் பொருட்கள் எங்கிருந்து வருகின்றன? யார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது? என்பது பற்றியெல்லாம் விசாரணை மேற்கொண்டு போதைப் பொருள் ஆணிவேரை கைது செய்தால்தான் தமிழ்நாட்டில் போதை ஒழிப்பு சாத்தியமாகும் என்று கூறியிருந்தேன். இதற்கு முதல்-அமைச்சரும் தெளிவான பதில் அளிக்கவில்லை, இப்போதைய காவல் துறை உயர் அதிகாரிகளின் அறிக்கையிலும் தெளிவான பதில் இல்லை. இதன் மர்மம் என்ன என்பதை காவல் துறை உயர் அதிகாரிகள் விளக்கவில்லை.
பாடம் புகட்டும் தருணம்
தங்களை வஞ்சிக்கும் இந்த ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்டும் தருணத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியின் தாளத்திற்கு, மக்கள் விரோதச் செயல்களுக்கு துணைபோகும் அதிகாரிகள் அதற்குரிய விலையைக் கொடுத்தாக வேண்டும். தி.மு.க. இடும் கட்டளைக்கு தலையாட்டி, அறநெறி தவறும் அதிகாரிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.