அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர்கிரைம் பிரிவு தொடக்கம்

திருச்சி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர்கிரைம் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2022-06-04 19:28 GMT

திருச்சி, ஜூன்.5-

திருச்சி மாவட்டத்தில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர்கிரைம் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சைபர்கிரைம் செல் பிரிவு

திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் திருச்சி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சைபர்கிரைம் செல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதில் மணப்பாறை, முசிறி, லால்குடி, திருவெறும்பூர், ஜீயபுரம் ஆகிய 5 உட்கோட்டங்களுக்குட்பட்ட ராம்ஜிநகர், பெட்டவாய்த்தலை, புலிவலம், வாத்தலை, இனாம்குளத்தூர், துவாக்குடி, நவல்பட்டு, கல்லக்குடி, சமயபுரம் உள்பட 35 போலீஸ் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள ஒவ்வொரு சைபர்கிரைம் செல் பிரிவிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட தலா 3 போலீசார் வீதம் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் சைபர்கிரைம் தொடர்பான பொதுமக்கள் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுரசீது வழங்குவதோடு, புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பின் கீழ் தொடர் விசாரணை நடத்துவார்கள் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

சிறப்பு பயிற்சி

இந்த நிலையில் திருச்சியில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புகார் பெறுவது தொடர்பாக சிறப்பு பயிற்சி நேற்று அளிக்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் பயிற்சியை தொடங்கி வைத்து பேசும் போது,

சைபர் கிரைம் (இணையவழி குற்றங்கள்) பற்றி பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை. சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக எங்கு சென்று புகார் அளிப்பது என்று தெரியாததால், அவர்களின் சிரமத்தை போக்க திருச்சி மாநகரில் அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தனியாக சைபர் கிரைம் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. சைபர் கிரைம் தொடர்பாக பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பெற்று உடனடியாக மனு ஏற்பு ரசீது வழங்க வேண்டும்.

இதுபோன்ற குற்றங்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்று பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் செயல்பட வேண்டும் என்றார்.

பயிற்சியில், துணை போலீஸ் கமிஷனர்கள் சக்திவேல், முத்தரசு, கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் வனிதா மற்றும் போலீஸ் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்