கடையம் அருகே பெண் கவுன்சிலரிடம் நகைபறிப்பு- மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் துணிகரம்

கடையம் அருகே, ஹெல்மெட் அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்து பெண் கவுன்சிலரிடம் நகை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2022-09-06 11:42 GMT

கடையம்:

கடையம் அருகே, ஹெல்மெட் அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்து பெண் கவுன்சிலரிடம் நகை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பெண் கவுன்சிலர்

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கானாவூரை சேர்ந்தவர் ஞானம் (வயது 36). இவர் கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

புலவனூரை சேர்ந்த தேவக்கனி மனைவி சமுத்திரக்கனி (56). இவர் கீழக்கடையம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக உள்ளார்.

ஞானமும், பெண் கவுன்சிலர் சமுத்திரக்கனியும் நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் கடையத்தில் இருந்து தென்காசிக்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஞானம் மோட்டார்சைக்கிளை ஓட்டினார். சமுத்திரக்கனி பின்னால் உட்கார்ந்து இருந்தார்.

நகை பறிப்பு

ஆசீர்வாதபுரம் தாமிரபரணி நீரேற்று நிலையம் அருகே மோட்டார்சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது மற்றொரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்து இருந்தனர். ஞானம் அருகில் வந்ததும் அந்த மர்ம நபர்கள் முகவரி கேட்பது போல் கேட்டனர். திடீரென சமுத்திரக்கனியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதை பார்த்த சமுத்திரக்கனி அதிர்ச்சி அடைந்தார். அந்த சங்கிலி 14 கிராம் எடை கொண்டது ஆகும்.

இது குறித்து கடையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார்சைக்கிளில் வந்து நகை பறித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் கடையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்