கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கியும் கிடப்பில் கிடக்கும் வளர்ச்சி பணிகள்-பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கியும் வளர்ச்சி பணிகள் நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.;
பொள்ளாச்சி
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் நிதி ஒதுக்கியும் வளர்ச்சி பணிகள் நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதாக பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசினார்.
பூமிபூஜை
பொள்ளாச்சியை அடுத்த சின்னநெகமம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் ரூ-.9 லட்சம் செலவில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி கட்டுவதற்கு பூமிபூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, பணிகளை தொடங்கிவைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்பிரபு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய குழு தலைவர் விஜயராணி ரங்கசாமி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் இந்திராணி ரமேஷ், சுப்பிரமணியன், அ.தி.மு.க. நிர்வாகிகள் சதீஷ்குமார், வீரமுத்து, மனோகரன், தியாகராஜன், வீராசாமி, அக்னீஷ் முகுந்தன், ஸ்கேன் பாயிண்ட் காளிமுத்து, அறிவழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அக்கறை இல்லை
பொள்ளாச்சியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மேற்கு புறவழிச்சாலை உள்பட பல்வேறு பணிகள் நிறைவேற்றாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. தி.மு.க. அரசு மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பொள்ளாச்சி பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின் வெட்டால் பொதுமக்கள், தொழில் முனைவோர்கள் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் கொள்முதலை அதிகரிக்க தமிழக அரசு கொள்முதல் நிலையங்களுக்கு உத்தரவிட வேண்டும். அ.தி.மு.க. இயக்கம் தி.மு.க.வை எதிர்த்து தொடங்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தி.மு.க.வுடன் நெருங்கிய உறவுடன் உள்ளதால் அவரை தலைவராக ஏற்றுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. மேல்முறையீட்டு மனுவில் மீது 1 ½ கோடி அ.தி.மு.க. தொண்டர்களின் மனநிலை தீர்ப்பாக கிடைக்கும். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நல்லாட்சி அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.