ரெயில் பயணிகளிடம் மடிக்கணினி -செல்போன் திருடிய 2 பேர் கைது

ரெயில் பயணிகளிடம் மடிக்கணினி - செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்

Update: 2023-07-20 20:53 GMT

கேரளா மாநிலம் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் அமல்தேவி. கர்நாடகா மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் நித்திஜான். இவர்கள் 2 பேரும் கொச்சிவேலி -மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தனர். அப்போது அவர்களுடைய கைப்பையை யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். அந்த கைப்பையில் 2 மடிக்கணினி மற்றும் 2 செல்போன்கள் ஆகியவை இருந்தன. இதனால் அமல்தேவி மற்றும் நித்திஜான் இதுகுறித்து ஈரோடு ரெயில் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர். மேலும் ரெயில் நிலையங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் அமல்தேவி, நித்திஜான் ஆகியோர்களது கைப்பையை 2 வாலிபர்கள் திருடிச்சென்ற காட்சி பதிவாகி இருந்தது. இந்த நிலையில் கைப்பையை திருடிய வாலிபர்கள் நேற்று ஈரோடு ரெயில் நிலையம் வந்தபோது போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், 'அவர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியை சேர்ந்த ராஜா என்கிற ஆரோக்கிய ஜேசுராஜ் (வயது 31), திருப்பூர் வி.ஓ.சி. பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் (30) ஆகியோர் என்பதும், அவர்கள் திருடிய கைப்பையில் இருந்த 2 மடிக்கணினி மற்றும் 2 செல்போன்களை விற்று மது அருந்தியதும்,' தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்