மடிக்கணினி திருடியவர் கைது

கொடைக்கானலில், சுற்றுலா பயணியிடம் மடிக்கணினி திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-24 16:43 GMT

கர்நாடக மாநிலம் பெங்களுரூ பொம்மனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சுபநாக் ஸ்ரீவத்சவா. நேற்று முன்தினம் இவர், தனது குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தார். அங்குள்ள பிரையண்ட் பூங்கா எதிரே காரை நிறுத்தி விட்டு சுபநாக் ஸ்ரீவத்சவா குடும்பத்தினர் உள்ளே சென்றனர். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது காரின் கதவு திறக்கப்பட்டு அங்கிருந்த மடிக்கணினி மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் சுபநாக் ஸ்ரீவத்சவா புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் கொடைக்கானல் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்தநிலையில் கொடைக்கானல் பஸ்நிலைய பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பையுடன் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த அப்துல் ரஷீத் (வயது 42) என்று தெரியவந்தது. மேலும் அவர் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில் சுபநாக் ஸ்ரீவத்சவாவின் மடிக்கணினி இருந்தது. இதனையடுத்து அப்துல் ரஷீத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மடிக்கணினி மற்றும் ஏ.டி.எம். கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்