புதுப்பேட்டை அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை
புதுப்பேட்டை அருகே அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.
புதுப்பேட்டை,
புதுப்பேட்டை அருகே எஸ்.ஏரிப்பாளையம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கொலு அமைக்கப்பட்டு, நவராத்திரி விழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மேலும் அம்மன் பாலாம்பிகை, சிம்ம வாகனம் மற்றும் மோகினி உள்ளிட்ட அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அம்மனுக்கு மாங்கல்ய பூஜை நடைபெற்றது. அப்போது தங்கத்தால் ஆன தாலியை, ஏழு சுமங்கலி பெண்கள் ஒன்று கூடி அம்மனுக்கு அணிவித்தனர். தொடர்ந்து உலக நன்மை வேண்டி விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.