ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வந்தால் நன்மை தருமா? வக்கீல்கள் கருத்து

ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வந்தால் நன்மை தருமா? என்பது குறித்து வக்கீல்கள் கருத்து தொிவித்துள்ளனா்.

Update: 2022-12-06 19:15 GMT

ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வரும் பட்சத்தில் அது நீதிபதிகளுக்கும், வக்கீல் களுக்கும், பொதுமக்களுக்கும் நன்மை தருமா? பாதிப்பு வருமா? என்பது குறித்து கேட்டபோது, வக்கீல்கள் தங்களது கருத்துகளை கூறியுள்ளனர்.

சாமானியனுக்கு தெரியாது

ஆங்கில வார்த்தைகள் இப்போது தமிழ்மொழியுடன் கலந்து அதிகம் உச்சரிக்கப்பட்டாலும், பல கடினமான ஆங்கில சொற்களுக்கு இன்றும் விளக்கம் தெரியாதவர்கள் பலர் உள்ளனர். அதுவும் சட்டம் தொடர்பான ஆங்கில சொற்களுக்கு கூடுதல் விளக்கம் தேவைப்படுகிறது. நீதி கேட்டு ஐகோர்ட்டுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சாமானிய மனிதன் சென்றால் அங்கு நடைபெறும் வழக்கு விசாரணை குறித்து அவருக்கு எதுவும் தெரியாது.

தன் வக்கீலும், எதிர்தரப்பு வக்கீலும், நீதிபதியின் முன்பு செய்யும் ஆங்கில வாதத்தை புரிந்து கொள்ள முடியாது. அன்னிய மொழியில் நடைபெறும் இந்த வாதத்தில், தான் கொடுத்த விவரங்களை எல்லாம் நீதிபதியிடம் தன் வக்கீல் எடுத்து கூறினாரா? என்று தெரியாது.

ஜனாதிபதி அதிகாரம்

ஆனால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 348-வது பிரிவு, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளில் ஆங்கிலம் மட்டும் தான் அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. அதேநேரம் 348(2)-வது பிரிவு ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக, அந்தந்த மாநில மொழியை அறிவிக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு என தெரிவிக்கிறது. இந்த அதிகாரத்தின்படி தான் அலகாபாத், பாட்னா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 ஐகோர்ட்டுகளில் வழக்காடும் மொழியாக இந்தி உள்ளது. எனவே சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளையில் தமிழை வழக்காடும் மொழியாக ஜனாதிபதி அறிவித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும்? என்று வக்கீல்களிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

மிக மிக இன்றியமையாதது

விழுப்புரம் பார் அசோசியேஷன் சங்க மூத்த வக்கீல் ராஜேஷ்:-

தமிழ்நாட்டில் நீதிமன்ற வழக்காடும் மொழியாக நமது தாய்மொழியான தமிழ் அறிவிக்கப்படவேண்டும் என்பது மக்களின் நியாயமான, நீண்ட நாள் கோரிக்கை. இது வெறும் கோரிக்கை மட்டுமல்ல, உரிமை. மேலும் வழக்காளிகள் பிரச்சினைகளையும், நிவாரண கோரிக்கைகளையும் வக்கீல்களுக்கு தமிழில் சொல்லி வழக்கு தொடுக்கலாம்.

இதன் மூலம் நீதிமன்றத்தில் தமிழிலேயே ஏற்கப்பட்டு, தமிழிலேயே நடத்தப்பட்டு அம்மொழியிலேயே தீர்ப்புகளும் வழங்கினால் நம் மக்கள் அவர்கள் சொல்லியவாறு வழக்கு முறையாக நடத்தப்பட்டு, உரிய தீர்வு கொடுக்கப்பட்டுள்ளதா என்று தெரிந்துகொள்ள ஏதுவாகும். நீதிமன்ற வழக்கு மொழி, வழக்காளிகளின் புரிதலுக்கு அல்லாததாக இருப்பதே மிகப்பெரிய அநீதி. இது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆகவே தமிழ்மொழி, தமிழ்நாடு நீதிமன்ற வழக்கு மொழியாக அறிவிக்கப்பட வேண்டியது மிக மிக இன்றியமையாதது ஆகும். மேலும் மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்பது சென்னை உயர்நீதிமன்றம் என்று மாற்றப்பட வேண்டும்.

புரிந்து கொள்ள எளிதாக இருக்கும்

விழுப்புரம் குற்றவியல் வக்கீல்கள் சங்க தலைவர் காளிதாஸ்:-

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக கொண்டு வந்தால் கண்டிப்பாக அனைவருக்கும் நன்மை பயக்கும். குறிப்பாக வழக்காளிகளுக்கு ஏனென்றால் எவர் ஒருவரும் தங்கள் கருத்தை தாய்மொழியில் சொல்லும்போது அதை புரிந்து கொள்வதற்கு எளிதாக இருக்கும். தன் தரப்பு வக்கீல்களின் வாத திறமையை வழக்காளிகளும் புரிந்துகொள்வார்கள்.

உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை தவிர்த்து 95 சதவீத நீதிபதிகள் தமிழகத்தை சேர்ந்தவர்கள்தான். அவர்களின் தாய்மொழி தமிழ்தான். அதனால் தமிழை வழக்காடு மொழியாக கண்டிப்பாக கொண்டு வர வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும்தான் வாதாடுகிறார்கள். அதேபோன்று தீர்ப்பும் தமிழிலும், ஆங்கிலத்திலும் அளிக்கின்றனர்.

அதே சமயத்தில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 90 சதவீத வக்கீல்கள் தமிழில்தான் வாதாடுகின்றனர். தற்போது உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் அனைத்தும் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வந்து கொண்டிருக்கின்றன. அதை வக்கீல்கள் படித்தவுடன் எளிதில் புரிந்துகொள்ள முடிகிறது. உயர்நீதிமன்றத்தில் தமிழில் மட்டும்தான் வாதாட வேண்டும், ஆங்கிலத்தில் வாதாடக்கூடாது என்று சொல்லவில்லை. தமிழை கட்டாயமாக்க வேண்டும், அவ்வாறு கட்டாயமாக்கினால் கிராமத்தில் உள்ள பட்டி, தொட்டிகளில் படித்து வக்கீல்களாக வரும் நபர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்காடும் நிலைமையை உருவாக்கலாம். அதனால் விரைவான நீதி கிடைக்க வாய்ப்பு உள்ளது. கீழமை நீதிமன்ற வக்கீல்கள், உயர்நீதிமன்றத்திற்கு செல்ல தயங்குவதால்தான் அங்கு ஆங்கிலத்தில் வாதாடும் ஒரு சில வக்கீல்களிடம் வழக்குகள் குவிவதால் வழக்கு தேங்கும் நிலை உள்ளது. மேலும் தமிழ் தெரியாத வெளிமாநில நீதிபதிகளுக்கு நாடாளுமன்றத்தில் உள்ளதுபோல் மொழி பெயர்ப்பு சாதனம் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

வழக்குகளை விசாரிப்பதில் தாமதம்

செஞ்சி வக்கீல் நடராஜன்:-

கீழமை நீதிமன்றங்களிலேயே தமிழில் வழக்காடினால் வழக்கு தோற்றுப்போகும் என்ற வக்கீல்களின் மனநிலை மாற வேண்டும். பெருநகர வக்கீல்கள் பிரீ-கேஜி முதலே ஆங்கிலப்பள்ளிகளில் பயின்று ஆங்கிலப்புலமை பெற்றுள்ளனர். கிராமப்புற வக்கீல்கள் பெரும்பாலும் அரசு பள்ளிகளில் பயின்று வருவதால் ஆங்கிலத்தில் வழக்காட சிரமப்பட்டே உயர்நீதிமன்றம் செல்ல தயக்கம் ஏற்படுகிறது. தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக மாற்றினால் அனைத்துத்தரப்பு வக்கீல்களும் தம் வழக்காடிகளின் பிரச்சினைகளை எளிதில் எடுத்துரைக்க ஏதுவாக அமையும். பிற மாநில நீதிபதிகளுக்கு மொழி பெயர்ப்பாளர் நியமனம் செய்யலாம். தமிழ் வழக்காடு மொழியானால் நாம் என்ன வாதம் முன்வைக்கிறோம் என்று வழக்காடிகளுக்கும் புரியும். உச்சநீதிமன்ற மேல்முறையீடு செல்லும்போது ஆங்கிலப்புலமை பெற்ற வக்கீல்களிடமே வழக்கு செல்லப்போகிறது. அவர்கள் மொழி பெயர்த்துக்கொள்வார்கள்.

திண்டிவனம் வக்கீல் எழில்மாறன்:-

தமிழகம் முழுவதும் வக்கீல்கள், கீழ்கோர்ட்டுகளில் தாய்மொழியான தமிழில் வழக்காடி வருகிறார்கள். கீழ்கோர்ட்டுகளில் எப்.ஐ.ஆர். முதல் தீர்ப்பு வரை தமிழில் நடைபெறுகிறது. உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம் பயன்பாட்டில் இருந்து வருகிறது. மற்ற மாநிலங்களை சேர்ந்த நீதிபதிகள், இடமாற்ற அடிப்படையில் வரும்போது தமிழ்மொழியில் விசாரணை நடத்தினால் அவர்களுக்கு மொழி தெரியாததால் வழக்குகளை விசாரிப்பதில் தாமதம் ஆகும். எனவே இதுபோன்ற நடைமுறை சிக்கல்களை சரிசெய்த பிறகு தமிழ் மொழியில் வழக்காடுவதை அவசியம் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

பயனுள்ளதாக இருக்கும்

கள்ளக்குறிச்சி வக்கீல் எம்.புன்னகை:-

ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழை கொண்டு வந்தால் அனைத்து வக்கீல்கள் மற்றும் வழக்காடிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். பெரும்பாலான மாநிலங்களில் அவர்களின் தாய் மொழியில் கோர்ட்டில் வழக்காடுகின்றனர். அப்படி இருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வரக்கூடாது. எந்த மொழியில் வழக்காடினாலும் சட்டம் ஒன்றுதான். எனவே தமிழ்மொழியில் வழக்காடுவது தவறில்லை. அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தவர்கள் அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் பெரும்பாலானவர்கள் தமிழ் மொழியில் தேர்வு எழுதுகின்றனர்.

எனவே ஆங்கில மொழியில் மட்டும் வழக்காட வேண்டும் என்பதால் அரசு பள்ளி மற்றும் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆங்கிலத்தில் மட்டும்தான் வழக்காட வேண்டும் என்பதால் இவர்கள் மாவட்ட கோர்ட்டு, தாலுகா கோர்ட்டுகளில் மட்டும் பணியாற்றுகின்றனர். நீதிபதி தேர்வில் ஒரு பேப்பர் தமிழில் உள்ளது. இதனால் அனைத்து நீதிபதிகளுக்கும் தமிழ் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே வழக்காடு மொழியாக தமிழை கொண்டு வந்தால் அரசு பள்ளி மற்றும் அரசு சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பெரும் பயனாக இருக்கும்.

வழக்கின் தன்மை பற்றி புரியும்

கள்ளக்குறிச்சி வக்கீல் ராமச்சந்திரன்:-

ஏழை, எளிய மாணவர்கள் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்துவிட்டு அரசு சட்டக்கல்லூரியிலும் தமிழ் வழியில் படிக்கின்றனர். எனவே தமிழில் தேர்வு எழுதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஐகோர்ட்டில் வழக்காட முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே வழக்காடு மொழி தமிழை கொண்டு வந்தால் கோர்ட்டில் நடக்கும் விசாரணையின் போது வழக்காடிகளுக்கு வழக்கின் தன்மை பற்றி புரியக்கூடும். தமிழ் மொழியில் தேர்வு எழுதிய வக்கீல்கள் பெரும்பாலானோர் மிகவும் திறமை வாய்ந்த வக்கீல்களாகவே உள்ளனர். இவர்கள் ஐகோர்ட்டில் வாதாட முடியவில்லை. எனவே தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வர வேண்டும்.

---

Tags:    

மேலும் செய்திகள்