7 இடங்களில் மண் சரிவு

குன்னூர், கோத்தகிரியில் பலத்த மழை பெய்தது. இதனால் 7 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் மலை ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சாிவு காரணமாக ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் தவித்தனர்.;

Update:2023-10-19 05:30 IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் குஞ்சப்பனை பகுதியில் கன மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் குறுக்கே ராட்சத மரம் ஒன்று சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. போக்குவரத்து தடைப்பட்டதால் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வரிசையாக நின்றன.


இது குறித்து தகவல் அறிந்த சோதனைச் சாவடியில் இரவு பணியிலிருந்த சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்கள் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் மரத்தை அப்புறப்படுத்த முடியாததால் தீயணைப்புத்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற வீரர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் மின் வாளால் சரிந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். மேலும் சரிந்து விழும் நிலையில் இருந்த மற்றொரு மரமும் வெட்டி அகற்றப்பட்டது.


சுமார் 3 மணிநேர போராட்டத்திற்கு பின் மரங்கள் அனைத்தும் வெட்டப்பட்டு, பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. பின்னர் காலை 7 மணி முதல் அந்த சாலையில் போக்குவரத்து சீரானது. இதே போல பலத்த மழையின் காரணமாக நிலத்தில் ஈரப்பதம் ஏற்பட்டதால் குஞ்சப்பனை சோதனை சாவடி கட்டிடம் மீது பக்கவாட்டில் இருந்த மண் திட்டு சரிந்து விழுந்தது. இதன் காரணமாக அந்தக் கட்டிடத்திற்கு சேதம் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாக கோத்தகிரியில் பெய்த மழை காரணமாக மேலும் 4 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. நேற்றும் முழுவதும் அவ்வப்போது சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


இதற்கிடையில் மேட்டுப்பாளையம்-ஊட்டி மலைரெயில் பாதையில் கல்லாறு-ஹில்குரோவ் ரெயில் நிலையங்கள் இடையே 2 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக தண்டவாளத்தில் பாறாங்கற்கள் உருண்டு விழுந்தன. மேலும் மண் சரிந்து தண்டவாளத்தை மூடியதோடு மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன.

இதன் காரணமாக மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு நேற்று காலை 7.10 மணிக்கு 180 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலைரெயில் கல்லாறு அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்துக்கு திரும்பி வந்தது.


இதையடுத்து ரெயில் நிலைய கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி 53 பயணிகளை பஸ் மூலம் குன்னூருக்கு அனுப்பி வைத்தார். மீதமுள்ள பயணிகளுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்பட்டது. எனினும் மலைரெயிலில் பயணிக்க முடியாமல் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அதோடு மலை ரெயில் போக்குவரத்து நேற்று ரத்து செய்யப்பட்டது. மேலும் மேட்டுப்பாளையம், குன்னூர் மலை ரெயில் இருப்பு பாதை பொறியாளர்கள் மேற்பார்வையில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி முடிந்த பிறகு மலைரெயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் குன்னூர் -ஊட்டி இடையே மலை ரெயில் இயக்கப்பட்டது.


குன்னூர் அருவங்காடு ரெயில் நிலையத்திலிருந்து பழைய அருவங்காடு செல்லக்கூடிய சாலையில் மழையினால் காலை 7.30 மணியளவில் ராட்சத மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலை துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று பொக்லைன் எந்திர உதவியோடு மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தற்காலிகமாக மாற்று சாலையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. சுமார் 4 மணி நேரத்திற்கு பின் சாலையில் விழுந்து கிடந்த மரம் முற்றிலும் அகற்றப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்