2-ம் கட்ட அகழாய்வுக்கு நில அளவீடு பணி

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக நில அளவீடு தொடங்கியது.

Update: 2023-02-22 19:14 GMT

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு பணிக்காக நில அளவீடு தொடங்கியது.

அகழாய்வு பணி

சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளம் பகுதியில் ஏற்கனவே முதல் கட்ட அகழாய்வு நடந்து, ஏராளமான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில் அங்கு 2-ம் கட்ட அகழாய்வு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்தது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஆயத்த பணிகளை நேற்று தொல்லியல் துறை தொடங்கியது. இதற்காக பணியாளர்கள் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கினர்.

விஜயகரிசல்குளம் கிராம நிர்வாக அலுவலர் ராமராஜ் மற்றும் தொல்லியல் துறை அதிகாரி பொன் பாஸ்கர் முன்னிலையில், 2-ம் கட்ட அகழாய்வுக்காக தேர்வு செய்த இடத்தை சுத்தம் செய்தல், அகழாய்வு குழிகள் தோண்டுவதற்கு அளவீடு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தன. விரைவில் அமைச்சர் தங்கம் தென்னரசு, அகழாய்வு பணிகளை தொடங்கி வைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

பழங்கால பொருட்கள்

கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் கட்ட அகழாய்வில் சங்குவளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தால் செய்யப்பட்ட அணிகலன், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய் உள்ளிட்ட 3,254 பழங்கால பொருட்கள் கிடைத்தன. அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் வெளிநாடுகளில் கடல்வழி வணிகம் செய்ததற்கான சான்றாக பல்வேறு பழமையான பொருட்கள் கண்டறியப்பட்ட நிலையில் அதன் தொடர்ச்சியை 2-ம் கட்ட அகழாய்வு மூலம் அறிய முடியும் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்