கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இடம் மீட்பு

கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இடத்தை அதிகாரிகள் மீட்டனா்.

Update: 2022-11-04 20:31 GMT

கும்பகோணம்;

கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான இடத்தை அதிகாரிகள் மீட்டனா்.

ஆக்கிரமிப்பு

கும்பகோணம் புதிய பஸ் நிலையம் ஜான் செல்வராஜ் நகர் பகுதியை இணைக்கும் சாலை புதிய பஸ் நிலையத்தின் வடக்கு புறத்தில் உள்ளது. இந்த சாலை அருகே ஒரு ஏக்கர் பரப்புள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது.இந்த இடம் பல கோடி ரூபாய் மதிப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த இடத்தை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இடம் மீட்பு

அதன்பேரில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் வருவாய்த்துறையினர், நகரமைப்பு பிரிவினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அந்த பகுதியில் சிலர் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்திருப்பது அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி ஊழியர்கள் நேற்று அதிரடியாக அகற்றி இடத்தை மீட்டனர். மேலும் அந்த இடத்தை வேறு யாரும் ஆக்கிரமிக்காத வகையில் நேற்று காலை தடுப்புச்சுவர் கட்டும் பணி தொடங்கியது.

சுவர் கட்டும் பணி

இந்த பணி நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்து நடந்தது. சுவர் கட்டும் பணி முழுமை அடையும் வரையில் கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கும்பகோணம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.இதுகுறித்து கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன் கூறுகையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் நீர்நிலைகள் பொது இடங்களில் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்