சென்னை, கோவையில் நில வழிகாட்டி மதிப்பு உயருகிறது -அமைச்சர் மூர்த்தி தகவல்

சென்னை, கோவையில் நில வழிகாட்டி மதிப்பு உயர உள்ளதாக அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

Update: 2023-07-27 21:59 GMT

சென்னை,

பத்திரப்பதிவு புதிய கட்டணத்தால் பொது மக்கள் மத்தியில் எதிர்ப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து மனை, கட்டிடங்கள் விற்பனை நிறுவனங்கள், பில்டர்கள், சங்க நிர்வாகிகளுடன் கருத்து கேட்பு கூட்டத்தை பதிவுத்துறை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடத்தியது.

ஒரு சதவீத கட்டணம்

கூட்டத்திற்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் ஜோதி நிர்மலாசாமி, பதிவுத்துறையின் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் 125 சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பேசியவர்கள், 'கிராமப்புறங்களில் 3 சென்ட் நிலத்தை பதிவு செய்ய மறுக்கிறார்கள், இதனால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், பத்திரப்பதிவு மென்பொருளால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும், இதனால் 3 முறை டோக்கன் வாங்க வேண்டியுள்ளது என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். பதிவுத்துறையில் 55 ஏ பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

வழிகாட்டி மதிப்பு உயருகிறது

கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

பெங்களூரு போன்ற இடங்களுக்கு சென்று பாருங்கள். அங்கே, தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்ப பத்திரப்பதிவு செய்யப்படுகிறது. இங்கே அப்படியில்லை. வழிகாட்டி மதிப்பை கொண்டு பத்திரப்பதிவு செய்யப்படுகிறது.

சென்னையில் சந்தை மதிப்பை விட வழிகாட்டி மதிப்பு குறைவாக இருக்கிறது. சதுர அடி ரூ.50 ஆயிரம் என்பது ரூ.15 ஆயிரமாக இருக்கிறது. எனவே நில வழிகாட்டி மதிப்பு குறித்து பேச வேண்டும். எனவே, சென்னை, கோவை போன்ற நகரங்களில் நில வழிகாட்டி மதிப்பை உயர்த்த பரிசீலிக்கப்படும்.

மாற்றிக்கொள்ளுங்கள்

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கர்நாடகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களை போல் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம். கிராமங்களில் வழிகாட்டி மதிப்பு சதுர அடிக்கு ரூ.21 முதல் இருப்பதாக சொல்லியிருக்கிறீர்கள். இனி குறைந்தது சதுர அடி ரூ.50 என்ற அளவில் நில வழிகாட்டி மதிப்பு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பத்திரப்பதிவு முறைக்கான நடைமுறையை இணையதளத்தில் பதிவு செய்தால் பத்திரப்பதிவில் எந்த பிரச்சினையும் இல்லை.

இவ்வாறு அவர் கூறியதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஒரு லட்சம் கூடுதல் செலவு

பதிவுக்கட்டணம் மற்றும் முத்திரைக் கட்டணம் மீது 1 சதவீதம் உயர்த்தப்பட்டதால் சொத்து விலைகளில் ஒரு சதுர அடிக்கு ஏறக்குறைய ரூ.100 என்ற கணிசமான விலை உயர்வை சந்தித்து உள்ளதாகவும், வீட்டு அல்லது அடுக்குமாடி குடியிருப்பை வாங்க வரும் நபர்களுக்கு ஏறக்குறைய ஒரு லட்சம் ரூபாய் கூடுதல் செலவை ஏற்படுத்தியுள்ளதாகவும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு (கிரெடாய்) தலைவர் இளங்கோ தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்