ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி; விவசாயி கைது
ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடியில் ஈடுபட்ட விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
போலி ஆவணங்கள்
ஈரோடு அருகே கணபதிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ் (வயது 64). விவசாயி. இவருக்கு சொந்தமான 50 சென்ட் இடம் தாளமடை கிராமத்தில் உள்ளது. இந்த நிலத்துக்கு அருகிலேயே சின்னியம்பாளையத்தை சேர்ந்த பழனிவேல் (65) என்பவரின் நிலமும் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜூக்கு பணம் தேவைப்பட்டது. இதனால் தனது நிலத்தை பழனிவேலிடம் அடமானம் வைத்து ரூ.85 ஆயிரத்தை பெற்று உள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜூக்கு சொந்தமான நிலத்தில் பழனிவேல் குழி தோண்டி உள்ளார். அதை தட்டி கேட்க ராஜ் சென்றபோது, தனது நிலத்தில் குழி தோண்டுவதாக அவர் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ், பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று விசாரித்தபோது ராஜூக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து பழனிவேலின் மகனுக்கு கிரையம் செய்தது தெரியவந்தது.
கைது
இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகரிடம் ராஜ் புகார் மனு கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் போலி ஆவணம் தயாரித்து ராஜூக்கு சொந்தமான நிலம் கிரையம் செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பழனிவேலை போலீசார் நேற்று கைது செய்தனர்.
இந்த வழக்கில் போலி ஆவணம் தயாரிப்பதற்கு உதவியாக இருந்தது யார்? நில மோசடியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.