'நிலம் செயலி' மென்பொருள் சேவை; அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்

ஈரோட்டில் ‘நிலம் செயலி’ மென்பொருள் சேவையை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

Update: 2022-12-05 22:50 GMT

ஈரோட்டில் 'நிலம் செயலி' மென்பொருள் சேவையை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

'நிலம் செயலி'

ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், 'நிலம் செயலி' எனும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாநகராட்சி மேயர் நாகரத்தினம், திருமகன் ஈவெரா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு நிலம் செயலியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நிலம் செயலியில் அனைத்து விவசாயிகளின் விபரங்களை கணக்கெடுப்பு செய்து அவர்களின் பெயர், தொலைபேசி எண், பாத்தியப்பட்ட நிலப்பரப்பு, சர்வே எண், பாசன நீர் ஆதாரம், மின் வசதி, நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ள விபரம், சாகுபடி செய்யும் பயிர்கள் உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

பண்ணை குட்டை

முதல் கட்டமாக கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் உள்ள 64 கிராமங்களின் விபரங்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இந்த செயலி மூலம் நில உரிமை ஆவணங்கள் பெற்று வழங்குதல், கிணறு, ஆழ்குழாய்கிணறு, பண்ணை குட்டை போன்ற பாசன நீர் ஆதாரங்களை உருவாக்குதல், மின் இணைப்பு பெறுதல், சொட்டுநீர் பாசனம், இயற்கை விவசாய சான்று வழங்கல், கடன் வசதி செய்தல், பி.எம். கிசான் மற்றும் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டங்களில் இணைத்தல், வேளாண் விளைபொருட்களுக்கு விற்பனை வசதி உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட உள்ளது.

இந்த திட்டம் தமிழகத்திலேயே முதன் முறையாக ஈரோட்டில் தொடங்கப்பட்டு உள்ளது. நிலம் செயலியானது கலெக்டர் மற்றும் மாவட்ட அளவிலான துறை அலுவலர்கள், வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், வேளாண் வணிக அலுவலர்களால் பயன்படுத்தப்படும். இந்த செயலி மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் என்னென்ன திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன, திட்டங்களில் பயன்படாமல் விடுபட்டுள்ள விவசாயிகள் எத்தனை பேர், ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குறிப்பிட்ட திட்ட சேவையானது எத்தனை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கிராமத்திலும் எத்தனை விவசாயிகளின் நிலை உயர்த்தப்பட்டுள்ளது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் தெரிந்து கொள்ள முடியும்.

ஆய்வு

இதன் மூலம் திட்டங்களின் முன்னேற்றங்களை உடனுக்குடன் கண்காணித்து ஆய்வு செய்யவும், திட்டங்களின் பயன்களை மதிப்பீடு செய்யவும், ஆலோசனைகளை வழங்கவும் பயனுள்ளதாக இருக்கும்

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் கஸ்தூரி, வேளாண்மை இணை இயக்குனர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்